Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

72 Views

சகுனம் நன்றே அமையட்டும்..
அனைவருக்கும் வணக்கம்,

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து வடக்கின் பிரதான பேசுபொருளாகவும், எதிர்ப்பார்ப்பாகவும் இருந்துவந்த விடயமான யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு யார்? முதல்வராக தெரிவு செய்யப்படப்போகின்றார்கள் என்ற கேள்விக்கு தற்போது முடிவு காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆர்னல்ட் மேயராக தெரிவு செய்யப்படுவாரா? என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்ததற்கு காரணம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினர் ஆரம்பத்திலிருந்தே ஆர்னல்ட் மேயராக தெரிவு செய்யப்படுவதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தி வந்ததுதான்.

10 ஆசனங்களைப் பெற்றிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரே ஆட்சியளரைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்ததால் அவர்களின் கருத்து ஊடகங்களில் பரபரப்பாக முன்னுரிமைபெற்றிருந்தது.

இந்தக் கேள்விக்கான இறுதி முடிவைத் தெரிந்து கொள்ளும் நாளாக மார்ச் மாதம் 26ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அத்தனை உறுப்பினர்களையும் ஆணையாளர் அழைத்திருந்தார். எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க போதுமான வெற்றியைப் பெற்றிருக்காத நிலையில் வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு ஆணையாளர் முடிவு செய்து எவ்விதமான வாக்கெடுப்பை நடத்துவது என்று உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அன்றைய அமர்வில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் சமூகமளித்திருக்க வேண்டிய நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவான ஒரு உறுப்பினர் சமூகமளிக்காத நிலையில் 44 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர்.

இதுதவிரவும் அந்த மண்டபத்திற்கு வெளியே மற்றுமொரு அறைக்குள் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். மறுபக்கத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கடசியின் மூத்த உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். பார்வையாளர்களாக அமர்ந்திருந்த இவர்கள் மேயர் தெரிவு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து ஒருவரக்கு ஒருவர் கைலாகு கொடுத்து சிரித்தவாறு வெளியேறிச் சென்றனர்.

நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னல்ட்டுக்கு சார்பாக 18 வாக்குகளும், மணி வண்ணனுக்குச் சார்பாக 13 வாக்குகளும், றெமிடியஸூக்குச் சார்பாக 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. இரண்டு தரப்புகள் தலா 13 வாக்குகளைப் பெற்றிருந்ததால் அவர்களில் ஒருவரையே இறுதிச் சுற்றுப்போட்டிக்குத் தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் அவர்களிடையே குலுக்கள் முறையில் தெரிவு நடத்தப்பட்டது. அதில் மணிவண்ணன் தோல்வியடைந்தார்.

ஆகவே இறுதிப் போட்டியில் ஆர்னல்ட்டும், றெமிடியாஸூம் போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு தரப்புகளும் தாம் போட்டிக்குத் தயாராவதற்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தபோதும் ஆணையாளர் அந்தக் கோரிக்கையை நிராகரித்து, பதினைந்து நிமிடங்களே வழங்க முடியும் என்று கூறினார்.

அந்த பதினைந்து நிமிட கால அவகாசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மணிவண்ணனுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தபோதும் அந்த கோரிக்கையை மணிவண்ணன் ஏற்கவில்லை. தமது கட்சியின் தலைமையின் முடிவுகள் அவ்விதமாக இல்லை என்றும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவளிப்பதான எந்தத் தீர்மானமும் தம்மிடையே இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்றும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் இறுதிச் சுற்று தேர்வுக்கான வாக்கெடுப்புக்கான அழைப்பை விடுத்தபோது, அப்போது அந்தப் போட்டியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் அறிவித்தனர் அத்துடன் ஆர்னல்ட் மேயராக ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு மேயர் ஆசனத்தில் ஆனல்ட் அமர்ந்தார்.

இதேநாளில் நடைபெற்ற சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளரைத் தெரிவு செய்யும் போட்டி 2 மணிக்கு நடைபெற்றது அதில் வெளிப்படையாக வாக்களிப்பை நடத்துவது என்றும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய முன்னணியும் தவிசாளருக்காக போட்டியிட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக தெரிவத்ததைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தின் அரசியல் சூழல் வேறு ஒரு வடிவத்தைப் பெற்றுவருவதாகத் தெரிகின்றது. இதுநாள் வரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியியும் எதிரும் புதிருமாக செயற்பட்டு வந்துள்ளனர். தற்போது இரு தரப்பும் ஒரு நேர் கோட்டுக்கு வருவதைப்போல் தெரிகின்றது. அதிதீவிர நிலைப்பாட்டை எடுத்த தமிழ்த் தேசிய முண்ணனியினர் தனித்து விடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அதுவரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் பின்பற்றிவந்த இணக்க அரசியல் வழிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றத் தொடங்கியது. அரசோடு இணக்க அரசியல் நடத்திக்கொண்டு, எதிர்க்கட்சியாகவும் இருந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுந்தீவிரவாதப் போக்கை கைவிட்டு, மென் தேசிய நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சபைகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கான முயற்சிகளையோ, சக கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளையோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொள்ளவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சியமைப்பதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகளை அதாவது உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தாதபோதும், இரண்டாம் கட்ட தலைமைகள் அவ்விதமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலான சபைகளில் இரண்டாவது பெரும்பான்மை ஆசனங்களையும் ஏனைய இடங்களில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும், யார்? ஆட்சியமைத்தால் எவ்விதமான அரசியல் நன்மைகள் தமக்குக் கிடைக்கும் என்பதையிட்டு ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் ஏனையவர்களை ஆட்சியமைக்கச் செய்து அவர்கள் மக்கள் எதிர்பார்த்தவாறு ஆட்சியமைக்கத் தவறினால் அதைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கச் செய்வதன் ஊடாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்நோக்கமாக இருக்க முடியும்.

எனவே ஊர்காவற்றுறை தவிர்த்த அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெறாத சபைகளில் ஆட்சியமைப்பதற்கான முயற்சியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எடுக்கப்போவதில்லை என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் யாழ்ப்பாண மாநகர சபையில் மேயர் வேட்பாளராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஏன் போட்டியிட்டது என்ற கேள்விக்கு விடைகாணப்பட வேண்டும்.

ஒருவேளை ஈழமகக்ள் ஜனநாயகக் கட்சி மேயர் வேட்பாளராப் போட்டியிட்டு மணிவண்ணனை எதிர்க்கட்சித் தலைமையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது. அந்த போட்டியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்த்திருந்தால் ஆர்னல்ட் முதல்வராகத் தெரிவாகும் அதேவேளை மணிவண்ணன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்படும் நிலைமையே முடிவாகியிருக்கும்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மேயர் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டியில் கலந்து கொண்டதால் தனக்கும் மேலதிகமாக 3 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைமையைபப் பொறுப்பேற்றுக் கொள்ளும் தகமை தமக்கு இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதில் சிந்திக்க வேண்டிய மற்றுமொரு விடயம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மேலதிகமாக கிடைக்கப்பெற்ற மூன்று ஆதரவை யார்? வழங்கினார்கள் என்பதாகும். அந்த மூன்று உறுப்பினர்களில் இருவர் சுதந்திரக் கட்சியினர் என்றும், ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவான ஒரு முஸ்லிம் உறுப்பினரும் என்றும் தெரியவருகின்றது.

ஆக, விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிழல் அவசியமாகியிருக்கின்றது. என்பது தெளிவாகியுள்ள நிலையில், இதனை சிறந்த சகுனமாக கொண்டு எதிர்காலத்தில் பொதுப் பிரச்சினைகளில் கைகோர்த்து செயற்படுவதன் மூலம் மக்களின் அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும் வரை நன்றி -