Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

51 Views

மரணப் படுக்கையில நல்லாட்சி..
அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் நாற்றமெடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை பல வாரங்களாக பதிவு செய்துவந்திருக்கின்றோம். அந்த நிலைமைகளில் முன்னேற்றங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. நாளுக்கு நாள் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளைப்பார்க்கின்றபோது நல்லாட்சி தனது இறுதிக்காலக் கதையை எழுதிக்கொண்டு இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகின்றது.

அண்மைக்காலமாாக தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலிலும் ஆங்காங்கே தலை தூக்கிய பாதாள குழுக்களும் அதேபோல் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் குழுக்களின் அட்டகாசங்களும் ஆங்காங்தே தலை துாக்கியுள்ளன.

இந்த நிலைமைகளில் திடீர் திருப்பமாக கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பை அண்டிய தலைநகரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், தலை துண்டிப்புச் சம்பவமும் மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.

யுத்தகாலத்தில் சாதாரண நிகழ்வுகளாக நடைபெற்றதைப் போன்று, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது -   ஒரு கொலை நடந்துள்ளது என்று இரண்டு வாரத்திற்குள் ஆறு சம்பவங்கள் கொழும்பைச் சுற்றியே நடந்துள்ளன.

இவை தவிரவும் வங்கிக் கொள்ளைகள் - போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பு என்று செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த சம்பவங்களைப் பார்க்கின்றபோது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுலாக்கம் என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளதா? - நாட்டு மக்கள் அச்சமற்று நடமாடும் சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதெல்லாம் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

இந்நிலையில், இன்றைய  சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ள காரணிகள் எவை என்பதை ஆராந்து பார்ப்பது அவசியமாகும்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நாட்டு மக்கள் இரத்தமும், வியர்வையும் சிந்தி சேமித்த பணத்தை கோட் சூட் அணிந்த திருடர்கள் ஒரு துளி வியர்வை சிந்தாமல் திருடியிருக்கிறார்கள். அந்தத் திருடர்களை பாதுகாப்பதிலும், அவர்களை தப்பிக்கச் செய்வதிலும் அரசின் உயர் பதவியில் இருப்பவர்களே முன்னின்றதும், அத்தகையவர்களிடமே சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி வழங்கியதும் சிறுபிள்ளைத் தனமானதும், பொறுப்பற்றதுமாகும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

அம்பாறை மற்றும் திகணயில் நடைபெற்ற இனவன்முறைகளை தொடர்ந்து பிரதமரிடம் இருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சை ஒரே இரவில் கைமாற்றி இன்னொருவரிடம் ஒப்படைக்கப்பட்டதும் கேலிக்குரியதாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.

நல்லாட்சி ஆட்சியாளர்கள் தங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி காரணமாக, மக்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் கண்டுகொள்ளாமையே, சமூக விரோதிகளுக்கும், சட்டவிரோதிகளுக்கும் சட்டம் ஒழுங்கு மீதான பயம் இல்லாமல் போய்விட்டது என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர்.

அரசியல் தலைமைகளிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டிகளும், அதில் தமது அதிகாரங்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் பேரப்பேச்சுக்களிலும் அனைத்து அரசியல் தலைமைகளும் மூழ்கிப்போய் இருப்பதால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகவோ, பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்புக்கள் தொடர்பாகவோ, பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாகவோ எவரும் அக்கறை கொண்டுள்ளதாகக் கருதமுடியவில்லை.

ஜனாதிபதியோ, பிரதமரோ வேறு எவரோ கூறும் எதையும் முழுமையாக நம்ப முடியாத நிலையிலேயே நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், தமது கட்சி நலனை முன்னிறுத்துவதற்காகவும், தமது குடும்ப உறவுகளின் சுகபோகங்களைப் பாதகாப்பதற்காகவுமே ஒவ்வொருவரும் செயற்படுகின்றார்கள் என்ற விரக்தியில் எவரையும் நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதை உணரமுடிகின்றது.

இவ்வாறு நல்லாட்சியில் நாடு சீரழிந்து போய்க்கொண்டு இருக்கையில்தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத பிரேரணையில் பிரதமர் காப்பாற்றப்படுவாரா - அல்லது தோல்வியடைவாரா? என்ற அரசியல் சதிராட்டம் கொழும்மை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணையை பொது எதிரணியினர் கொண்டு வந்திருந்தாலும், நல்லாட்சியின் பங்காளிகளாக இருக்கும் சுதந்திரக் கட்சியினருக்கும் பிரதமருக்கு எதிரான மனோநிலையே மேலோங்கியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணையை வெற்றிபெறச் செய்தால் மீண்டும் ஒரு புதிய அரசு அமையப் பெறும் என்றும் அதிலாவது தாம் சுதந்திரமாகச் செயற்படும் சூழல் ஏற்படும் என்றும் சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஒருவேளை நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியடைந்து பதவியை இழக்க நேர்ந்தாலும் மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் புதிய பிரதமரின் தலைமையில் ஏற்படுமே தவிர நாடாளுமன்றத்தை கலைத்தவிட்டு தேர்தல் ஒன்றை நடத்துவதற்கோ, முழுமையாக பொது எதிரணியை நம்பி ஆட்சியை அவர்களிடம் ஒப்படைப்பதற்கோ ஜனாதிபதி துணிய மாட்டார்.

மீண்டுமொரு தேசிய அரசாங்கம் அமைத்து அதை தற்போதைய நாடாளுமன்றத்தின் இறுதிக்காலமான இன்னும் இரண்டு வருட காலத்திற்கு நிர்வாகத்தை முன்னெடுக்கவெ ஜனாதிபதி விரும்புவார்.

அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் அதிகார முரண்பாடுகள் இருந்தாலும், மஹிந்தவுடன் பயணிப்பதை விடவும், ரணில் விக்கிரம சிங்கவுடன் இன்னும் சில காலம் பயணிப்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கான தந்திரோபாயமாகக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

அவ்வாறான ஒரு எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லாவிட்டால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னின்று ஆதரித்து மத்திய வங்கிப் பிணைமுறை மோசடி விசாரணைகளை அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டு செல்லவேண்டிய கடமைப் பொறுப்பை ஜனாதிபதி நிறைவேற்றுவார். ஆனால் ஜனாதிபதியோ பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் ஒருவகை நழுவல் போக்கையே இதுவரை கொண்டிருக்கின்றார்.

தேர்தல் நேரத்தில் மத்திய வங்கிப் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் மீதும் குற்றம் இருக்கின்றது என்பதை துணிச்சலோடு நாட்டு மக்களுக்கு தெரிவித்து குற்றவாளிகளை தப்பிக்கவிட மாட்டேன் என்றும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.

அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாடாளுமன்றத்திற்கு கொடுவரப்பட்டுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகச் செயற்படுவாரானால் அது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணானதாகும் என்பதையும் ஜனாதிபதி அறியாதவரல்லவே.

ஆக, மரணப் படுக்கையில் இருக்கின்ற நல்லாட்சியின் ஆயுட் காலம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடிக்கும் என்பது இன்னும் சில நாட்களில் வெட்டவெளிச்சமாகி விடும். மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி -