Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

60 Views

மீண்டுமொரு அசிங்கம் திருமலையில்..

மீண்டும் ஒருமுறை திருகோணமலையில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. சமாந்தரமாக - சமத்துவமாக பயணிக்க வேண்டிய இரண்டு சமூகங்கள் இன்னொருமுறை உரசுப்பட்டிருக்கின்றன.

ஒரு பாடசாலையின் நிர்வாகத்திற்கும் ஆசிரியைகள் சிலருக்கும் இடையிலான கருத்து முரண்பாடு, தவறான அணுகுமுறையினால் பிழையான திசைக்கு இழுக்கப்பட்டிருக்கின்றது.

ஒவ்வொரு இனமும் தங்களுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அவர்களுடைய காலச்சார பாண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்ல,  ஒவ்வொருவருக்கும் தங்களுடைய அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது அவர்களுடைய உரிமை.

அந்தவகையில், இரண்டு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினால் இந்த துரதிஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது.

சம்மந்தப்பட்டவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அறிவு ரீதியான சிந்தனைக்கு சற்று முன்னுரிமை அளித்திருப்பார்கள் எனில், இவ்விவகாரத்தை சுமூகமாக நிறைவு செய்திருக்க முடியும்.

சுமார் 95 வருட பழமை வாய்ந்த பாடசாலை, தமிழ் மக்களினதும் சைவ சமயத்தினதும் விழுமியங்களை பேணிப் பாதுகாக்கின்ற தளங்களில் ஒன்றாக திருகோணமலை மக்களினால் பாதுகாக்கப்பட்டு வருவாதாக தெரிகின்றது.

இந்தப் பாடசாலை, ஒரு இந்துப் பாடசாலையாக இருக்கின்ற போதிலும் தமிழ் பேசும் ஏனைய மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர் - ஆசிரியர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர்.

ஆனால், பாடசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சைவ பாரம்பரியத்திற்கு அமையவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இந்நிலையில், குறித்த பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த முஸ்லீம் ஆசிரியைகள் தங்களுடைய கலாச்சார அடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனை சுட்டிக் காட்டிய பாடசாலை அதிபர்,  கல்லுாரியின் வழக்கினை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை தங்களுடைய கலாச்சாரத்தினை அவமதிக்கும் செயலாக கருதிய சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள், தங்களின் உறவினரிகளுடன் பாடசாலைக்குள் நுழைந்து அதிபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த பாடசாலை சமூகம் அதிபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பபாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

மாறாக இந்த நாட்டிலே, சிறுபான்மை இனங்களாக வாழுகின்ற இரண்டு இனங்களுக்கும் இடையில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் சிந்தித்திருப்பார்களாயின் நிலைமை சுமூகமாக அமைந்திருக்கும்.

பாடசாலையின் பாரம்பரியமும் தங்களுடை விழுமியங்களும் பாதிக்கப்படாத வகையில் எவ்வாறு சமரசம் செய்து கொள்ளமுடியும் என்று சம்மந்தப்பட்ட ஆசிரியைகளின் தரப்பினர் அதிபர் உட்பட்ட பாடசாலை நிர்வாகத்துடன் கருத்துக்களை பராமரிக்கலாம்.அதேபோன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாடசாலை தரப்பினரும், அதிபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எச்சரிக்கையை சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக கையாண்டிருக்கலாம். இவை இரண்டும் நடைபெறவில்லை. உணர்ச்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மதத் தலைவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கலந்துரையாடி பொதுவான தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

இதனை முதலிலேயே செய்திருந்தால் ஊர் இரண்டு படுகின்ற சந்தர்ப்பத்திற்காய் காத்திருக்கும் கூத்தாடிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்திருக்கலாம்!

சம்மந்தப்பட்டவர்கள் சற்று நிதானம் இழந்தமையின் விளைவு, கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகியிருக்கின்றது. சமூக ஊடகங்களில் தங்களின் கீழ்த்தரமான சிந்தனைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். உறங்கிக் கொண்டிருக்கின்ற இனவாதப் பிசாசிற்கு உருவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் இனவாதம் உசுப்பேற்ற பட்டதாலும் - உசுப்பேற்றிய இனவாதப் பிசாசுசின் நிழலில் குளிர் காய முற்றபட்டமையினாலும் நடந்தேறிய குரூரங்களும் அவலங்களும் அண்மைய வரலாறுகளாக கண்முன் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதைப்பார்த்தும் - அனுபவித்த பின்னரும் நம்பில் பலர் திருந்தவில்லை என்பது வேதனையிலும் வேதனை.

குறுகிய சிந்தனைகளும் சுயநலப் பார்வையும் சமூகங்களுக்குள் பரவிக் கிடப்பதன் மூலம் சுயலாபங்களை அறுவடை செய்து பழகிப் போன சிறிய தரப்பினர், தொடர்ந்தும் சமூகங்கள் பிரிந்து நிற்பதையே உளமார நேசிக்கின்றனர்.

பிரிந்து நின்றால் நாம் பிரித்து மேயப்பவோம் என்ற யாதர்தத்தினை அனுபவ பாடமாக இந்த நாட்டில் வாழுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.இல்லையேல்...?!