Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

289 Views

அவருக்கு நிகர் எவருமில்லர்..

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான மாற்றுத் தலைமையாக உருவாக வேண்டும் என்ற ஆர்வததில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் பெயரில் தமிழ் மக்களிடையே தம்மை நிலை நிறுத்தும் காரியங்களை நகர்த்தினார்கள்.

அந்த முயற்சியும் பிசுபிசுத்துப்போனது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற உண்மையை அவர்கள் சந்தித்த நாடாளுமன்ற தேர்தல்களில் கிடைத்த பலத்த பின்னடைவு உணர்த்தியது.

இந்நிலையில், மாற்று அணிக்கான தலைமைப் பொறுப்பை வகிக்க கூடிய ஒருவரை மூவுலகிலும் தேடுதல் வேட்டை நடத்தியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அந்தத் தலைமைப் பொறுப்புக்கு வைத்துக்கொண்டு தமது அரசியல் திட்டங்களை முன்னெடுனக்க முடியும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை உரவாக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையில் விக்கினேஸ்வரன் தலைவராக காட்டிக்கொள்ளப்பட்டபோதும், தமிழ் மக்கள் பேரவைக்கு இணைத் தலைமைகளும் உருவாக்கப்பட்டு அது முன்னகர்த்தப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் பேரவையை ஒரு தேர்தல் அரசியல் அமைப்பாக செயறடபடுத்தப் போவதில்லை என்ற கருத்து மேல் எழுந்ததை கஜேந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல், காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளும் போராட்டங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்கும் போராட்டம் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் என தமிழ் மக்களிடையே முதன்மைப் பிரச்சினைகளாக இருக்கும் பிரச்சனைகளில் தமிழ் மக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்குள் தம்மையும் பங்காளிகளாக காட்டிக்கொண்டு தமது அரசியல் செயற்பாடுகளை வியாபிக்கத் தொடங்கியிருந்த போதுதான் எதிர்பாராத விதமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மாகாணசபை முறைமையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுகூறி மாகாணசபைக்கான தேர்தலிலும் போட்டியிடுவதைத் தவிர்த்து வந்த கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினருக்கு தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரிய பின்னடைவே கிடைத்தது.

இந்த நிலையில் புதிய வட்டார முறையோடு அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது. இலங்கையின் இறைமைக்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம் செய்யும் பதவிகளான உள்ளுராட்சி உறுப்பினர் பதவிகளை ருசிக்க தேர்தலில் போட்டிடத்தீர்மானித்தார்கள்.

தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததற்கு வேறு காரணங்களும் இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஆட்சியாளர்களின் ஆசியுடன் எதிர்க்கட்சியாகவும் நாடாளுமன்றத்தில் இருந்தபோதும்,  தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்காமலும் இருந்து வருவதாக கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை தாம் அறுவடை செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலுமே போட்டிக்கு களம் இறங்கினார்கள்.

நூற்றுக்கணக்கான உறுப்பினர்களைத் திரட்டவேண்டும் என்பதற்காக பொது அமைப்புக்கள், தனிநபர்கள் என பலரையும் தேர்தலுக்காக இணைத்துக்கொண்டு போட்டியிட்டார்கள். கஜேந்திரனின் தேர்தல் வியூகம் பெரிதாக பிழைத்துப்போகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமாந்தரமான வெற்றியும் சாத்தியமாகியது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் பெரும்பான்மையான உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது மாத்திரமல்லாமல், ஏனைய சபைகளிலும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் பெற்றுக்கொண்ட வெற்றியானது செயலற்றதாகிப்போய்விட்டது.

இந்த நிலையில் கஜேந்திரன் அணியில் கூட்டுச் சேர்ந்து வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது அடுத்த கட்டமாக எனன்செய்வது என்பது தெரியாத நிலையில் தனி நபர்களாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலிலேயே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்ந்து அரசியல் நடத்தப்போவதாகவும், தனித்தோ, கூட்டாகவோ தனது அரசியல் எதிர்காலப் பயணம் தொடரும் என்றும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய செய்தி வெளியானது.

விக்கினேஸ்வரனின் இந்த அறிவிப்பு மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளைவிடவும் கஜேந்திரன் அணியினரையே அதிர்ச்சியடைச் செய்தது. முதலமைச்சராக இருந்து அதிலும் ஓய்வு பெற்றதும், அரசியலிலிருந்து நிரந்தர ஓய்வு பெற்றுவிடுவதாக கூறிவந்த முதலமைச்சர் தொடர்ந்து அரசியல் நடத்துவதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை முன்வைப்பதும் தமது அரசியல் இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்த நிலையில் விக்கினேஸ்வரனுடன் இணைந்து அரசியலை முன்னெடுக்கும் திட்டம் தீட்டப்பட்டது.

அந்த திட்டத்தில் விக்கிணேஸ்வரனை தலைமையாக முன்னிறுத்துவதைவிடவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ள நிலையிலும், புலம்பெயர்ந்துள்ள சிலரின் ஆதரவும், ஆசியும் இருக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் தாமே தமிழ் மக்களின் தலைமையாக விஷ்வரூபம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோற்றம் பெற்றிருக்கலாம்.

அந்த அடிமன விருப்பத்தினையே நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் உரையாற்றிய கஜேந்திரன் அணியின் உறுப்பினர் ஆனந்தராசா மற்றும் சுகாஸ் போன்றவர்களின் பேச்சு வெளிப்படுத்தியது.

அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆகவே பிரபாகரனுக்கு அடுத்த தலைமையாக தமிழ் மக்களுக்கு இப்போது இருப்பவர் கஜேந்திரன்தான் ஆகவே அவர் வழியில் நடந்து தமிழ் மக்கள் தமக்கான தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்று அந்த மேடையில் தமிழ் மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.

இந்த அறிவிப்பை கஜேந்திரன் அணியினர் வெளிப்படுத்தியபோது அங்கே கூடியிருந்த தமிழ் மக்கள் அதிர்ந்துபோனார்கள். 'பிரபாகரன்' எனும் தலைமைக்கு கஜேந்திரனை கொண்டுவந்து நிறுத்துகின்றார்களே இவர்களுக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா? என்ற கேள்விகளும், அதிருப்திகளும் மக்களிடையே இருந்து வெளிப்பட்டது.

“அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காழியாகும்” என்று இவர்கள் காத்திருந்தார்களா? என்ற விதமாக விமர்சிக்கட்டது. இன்னும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசியத் தலைவராக கருதுகின்ற தமிழ் மக்களின் கோபத்துக்கும் ஆளாக வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றது.

இவ்வாறு நிலைமை கஜேந்திரனுக்கு எதிர்விளைவைக் கொடுக்கத் தொடங்கிதைத் தொடர்ந்தே இந்த எதிர்ப்பு அலையை தடுத்து நிறுத்தும் அவசரத்தில் கஜேந்திரன் அணியின் மற்றுமொரு முக்கியஸ்தரான கஜேந்திரன் ஊடகவியலாளர்களை அவசரமாக அழைத்து தமது அணியினர் கூறிய கருத்துக்கள் தவறானது என்றவிதமாக தன்னிலை விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய போராட்ட வரலாற்றினை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு போராட்டத்தை வளர்த்தெடுத்து - வழிநடத்தி, தமிழர் பிரச்சினையை சர்வதேச கவனத்தை ஈர்க்கின்ற விவகாரமாக மாற்றியவர். அவரின் ஆளுமையையும் தியாகத்தினையும் அவருடைய எதிரிகளே மதிக்கின்றனர்  - முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த தேசியத் தலைமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற அந்த கருத்து தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிர்விளைவு எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.