Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

51 Views

உன்னதாமானவர்களை அவமானப்படுத்தாதீர்..!
அனைவருக்கம் வணக்கம்!

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யாருடைய தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெறுவது என்பதே சில நாட்களாக தமிழர்களை உலுக்கிக்கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கின்றது.

வடக்கு மாகாணசபையே தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற முன்னெடுப்புக்கள் ஒரு புறமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையிலேயே அந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்ற முன்னெடுப்புக்கள் மற்றுமொரு புறமுமாக இரு தரப்புக்குமிடையே இழுபறி நிலைமை தொடர்கின்றது.

வடக்கு மாகாணசபை அதைப் பொறுப்பேற்று நடத்தினால், அதற்கு ஒரு மறைமுகமான சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்பதும், எக்காலத்திலும் அந்த நிகழ்வை வடக்கு மாகாணசபையை நிர்வகிக்கும் எவரும் மறுப்பில்லாமல் செய்து முடிக்கும் கடமைப்பொறுப்பு அவர்களுக்கு இருக்கும் என்றும், மாகாணசபை பொறுப்பேற்று நடத்தும் நிகழ்வானது வட மாகாணத்தின் தேசிய நிகழ்வைப் போன்று பார்க்கப்படும் என்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியினர் கூறுகின்றனர்.

முதலமைச்சர் கூறுவதில் சில நியாயங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், முதலமைச்சரின் தலைமையில் அந்த நிகழ்வு நடந்தே தீரவேண்டும் என்று பிடிவாதமாக இருப்போரின் உள்நோக்கத்தையும் பல்கலைக்கழக மாணவர்கள் அறியாமலில்லை.

தமிழர்கள் ஒற்றுமையாக நடத்த வேண்டிய இந்த நிகழ்வை முதலமைச்சர் தலைமை ஏற்று நடத்துவதன் ஊடாக தன்னை ஒரு தேசியத் தலைமையாக காட்டிக்கொள்ளவும், தனது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு தமிழ் மக்களின் இழப்பையும் கண்ணீரையும் மூலதனமாகப் பயண்படுத்திக்கொள்ள முற்படுகின்றார் என்று மாணவர்கள் சிந்திக்கின்றனர்.

அதற்குக் காரணம் கடந்த தொழிலாளர் தினத்தன்று தேசியத் தலைவர் பிரபாகரன் இப்போது நம்மிடையே இல்லை. அந்த இடைவெளியை நிரப்பும் புதிய தலைவராக கஜேந்திரகுமார் திகழ்கின்றார் என்று அந்தக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு கூறியதைப் பார்க்கும்போது, சில காலம் தமிழ்த் தேசியம் என்றும், பிரபாகரனே எங்கள் தலைவர் என்றும் கூறுவோர் ஈற்றில் தாமே தேசிய தலைமை என்று கூறுகின்ற உள்நோக்கத்துடனேயே செயற்படுகின்றனர் என்ற உண்மையை மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

தமிழ் அரசியல் தலைமைகள் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கவும், தமிழ் மக்களின் உரிமைக்குரலாக என்றும் ஒலிக்கவும், தமிழர்களின் அபிலாiஷகளை சுயலாபங்களுக்கு அப்பால் நின்று முன்னிறுத்தவும் மாணவர்கள் சக்தியே இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் விரும்புகின்றார்கள். இல்லாவிட்டால் மூக்கணாங்கயிறு இல்லாத மாடுகளைப்போன்று அரசியல் தலைமைகள் வழிநடத்தும் வண்டிகள் திசை மாறிப்போய்விடும் என்று மாணவர்கள் அஞ்சுவதாக தெரிகின்றது.

ஆகவே, தமிழர்கள் அனுஷடிக்க வேண்டிய தேசிய துக்க தினத்தை தலைமை ஏற்று நடத்தக்கூடியதொரு தமிழ்த் தலைமை தற்போதைக்கு யாரும் இல்லை என்பதே மாணவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை யாரும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்தைப் பெற்றிருக்கவில்லை.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக மத்திய அரசுகளுடன் நெஞ்சு நிமிர்த்தி உரிமைக் குரல் கொடுக்கும் வலிமையோ, போராட்ட குணத்தையோ ஒருவரும் கொண்டிருக்கவில்லை.

சுருக்கமாகக் கூறினால் தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் ஒட்டுமாத்த தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தவர்களாகவும், சந்தர்ப்பவாத சுயலாப அரசியல் நடத்திக்கொண்டு அதை சாணக்கியம் என்றும், தந்திரோபாயம் என்றும் கூறிக்கொண்டும் தென்னிலங்கை விசுவாசியாகவும், வடக்கு கிழக்கில் வீர வேங்கையாகவும் பாசாங்கு செய்பவர்களாகவுமே இருக்கின்றனர் என்பது மக்களின் அபிப்பிராயம்!

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எனும் உறுதியான சக்தியானது, தமிழர் வரலாற்றில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய வரலாற்றைக் கொண்ட ஒரு அமைப்பாகவே செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ்த் தலைமைகள் அகிம்சைப் போராட்டம் நடத்துவதாக கூறியபடி தான்றோண்டித்தனமாக நடந்தபோது அதை துணிந்து விமர்ச்சித்ததோடு மட்டுமல்லாமல் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டுமென கூறியதும் - போராட்டப் பாதையில் தமிழ் இயக்கங்கள் சகோதரச் சண்டை பிடித்துக் கொண்டு மனித வேட்டை நடத்தியதைக் கண்டு, இயக்கங்களின் ஆயுதப் போராட்டமானது திசைமாறிப் பயணிக்கின்றது என்று கண்டித்ததும் - விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து நின்று களமாடியபோது, அதற்கு பக்கபலமாக செயற்பட்டு தனது பங்களிப்பை செய்ததும் இதே யாழ்பப்பாண பல்கலைக்கழகச் சமூகம்தான்.

தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களில் மிக அதிகமாக பங்களிப்புச் செய்த ஒரே அமைப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு என்றால் அது மிகையாகாது.

இன்று குறிக்கோளை மறந்தும், கொள்கைகளை கைவிட்டும் தேர்தல் அரசியலில் பதவிகளுக்காக மேடைகளில் விடுதலைப் புலிகளின் வீரத்தை பேசுகின்ற எவருக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பின் போராட்டப் பங்களிப்பை கேள்விக்குட்படுத்த அறுகதை இல்லை என்பதே மாணவர்களின் நிலைப்பாடாகும்.

அரசியலில் தலைமைகள் மாறலாம், தலைமைகளின் கொள்கைகள் மாறலாம், அரசியல் சூழல் மாறலாம் ஆனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எனும் இந்த சக்தி ஒருபோதும் மாறப்போவதில்லை. அதேவேளை மாணவர் சக்தியானது எவரது அரசியல் சுயலாபங்களுக்காகவும் மண்டியிடவும் போவதில்லை என்பதே மாணவர்களின் உறுதியான முடிவாகவும் இருக்கின்றாக தெரிகிறது.

அதேவேளை மாணவர்கள் இத்தகைய கனதியான தேசிய நிகழ்வுகளை நடத்துவதால் அதற்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்றும், மாணவர்களின் கைகளில் அதை ஒப்படைத்துவிட்டு சிறு பிள்ளைகளுக்குப் பின்னால் ஒரு இனம் பயணிக்க முடியாது என்றும், இவர்களின் செய்றபாடானது 'சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்ற கதையாகவே போய் முடியும் - அது எமது மக்களின் நோக்கத்தை சீர்குழைத்துவிடுவதுடன், தேவையற்ற தடைகளையும், பதற்றங்களையுமே தோற்றுவிக்கும் என்பதே வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சார்ந்தவர்களின் விமர்சனமாக இருக்கின்றது.

இவ்வாறான இழுபறி நிலையில் மே 18ஆம் திகதிக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்ற காரணத்தினால் இரு தரப்பையும் ஒன்றினைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்குக் காரணம் முதலமைச்சர் அணியும், மாணவர்கள் அணியினரும் நினைவஞ்சலி நிகழ்வுக்கு அழைக்கும் நபர்கள் ஒரே தரப்பினராகவே இருப்பதால், யாருடைய அழைப்பை ஏற்றுச் செல்வது என்ற தீர்மானத்திற்கு வரமுடியாமல் பொது அமைப்புக்களும், முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை பறிகொடுத்த உறுவுகளும் குழம்பிப்போய் இருக்கின்றார்கள்.

இறந்த ஆத்மாக்களுக்காக நடத்தப்படும் அஞ்சலி நிகழழ்வானது அரசியல் கலப்பு இல்லாமல் பொதுவான நிகழ்வாக நடைபெற வேண்டும் என்று மாணவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கின்றது ஏன் என்றால் அரசியல் நலன்களோடு அந்த நிகழ்வை குறிப்பிட்ட தரப்பினர் அதை நடத்தினால், அதில் அரசியல் வேறுகொண்டவர்கள் கலந்து கொள்வதில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த காலத்தில் இவ்வாறு அரசியல் தலைமைகள் இந்த நிகழ்வை நடத்தியதால் ஒட்டுமொத்த தமிழ்த் தலைமைகளும் ஒருமனதாக கலந்து கொள்ள முடியாது போனதும், ஒரே நாளில் பல இடங்களில் பலவாறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நடந்ததும், ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு நடந்த அஞ்சலி நிகழ்வுகள் பரிகாசத்துக்குரியதாகிப் போனதும் நடந்ததை நாம் மறக்கவில்லை.

ஒருவர் சட்டியில் கற்பூரத்தை போட்டு தீமூட்டிவிட்டு தலையை குனிந்து ஒரு இடத்தில் நிற்பார், இன்னொரு இடத்தில் பந்தத்தைச் சுற்றி அதை தீ மூட்டி ஒருவர் அஞ்சலி என்பார். இன்னொரு இடத்தில் மேடை அமைத்து அதில் உறவைப் பறிகொடுத்த ஒருவரின் தாயார் தீ மூட்ட வேண்டும் என்றும், மற்றுமொரு இடத்தில் அரசியல் தலைவர் தாமே தீ மூட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பார்.

இந்த குழப்பங்களைத் தவர்த்துவிட எண்ணுவோர் தமது வீடுகளில் சிட்டி விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்துவர், இன்னொரு அணியினரோ வல்வெட்டித்துறைக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டுக்குள் விளக்கு ஏற்றி அஞ்சலித்தோம் என்று கூறுவதும் முன்னர் நடந்த அபத்தங்களாகும்.

இவ்வாறு ஆளுக்கொரு பக்கமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று சேராமல் அஞ்சலி நிகழ்வு நடத்துவதால், ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமது உயிர்களை ஈகை செய்த அத்தனை தமிழர்களின் உன்னதமான தியாக வரலாறானது ஏதோ சம்பிரதாயச் சடங்குபோல் மாறிவிடுவதாகவே அமையும். எனவே முதலில் தமிழ் மக்களிடையே இவ்விடயத்தில் பொது ஒற்றுமை அவசியமாகும்.

அரசியல் சுய லாபங்களையும், வேறு பாடுகளையும் தாண்டி தேசிய துக்க நிகழ்வு நடைபெற வேண்டுமாக இருந்தால் அதை பொதுவான அமைப்பு பொறுப்பேற்று நடத்த வேண்டும். அத்தகைய பொதுவான அமைப்பானது இன்றைய சூழலில் அது மாணவர் அமைப்புத்தான்.

ஆகவே மாணவர் அமைப்பினர் இந்த பாரிய பொறுப்பை உணர்ந்து, தமது விருப்பு வெறுப்புக்களை தூரத்தே தூக்கி எறிந்துவிட்டு, அனைத்து தரப்பினரையும் அழைத்து கௌரவமாக இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும்.

அவர் அந்தக் கட்சி, இவர் இந்தக் கட்சி என்ற பாகுபாட்டுக்கும், அமைப்பு ரீதியான வேறுபாடுகளுக்கும் எவரும் இடமளிக்கக்கூடாது. மே 18 இல் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒரே எண்ணத்துடன் இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே வாழுகின்ற தமிழர்களின் வாழ்வில் பெறுமதியான பலனைக் கொடுக்கும்.

சிங்கள தேசமோ இத்தகைய நிகழ்வு நடைபெறவே கூடாது என்று ஆந்தைப் பார்வை பார்த்துக்கொண்டு இருக்கையில், அர்த்தமற்ற இழுபறிகளால் பொது எதிரியின் விருப்பங்களை நிறைவேற்றி உயிர்த்தியாகம் செய்தவர்களை - அவமானப்படுத்திவிடக்கூடாது என்ற இன உணர்வே ஒவ்வொருவரிடமும் உயர்ந்து நிற்கவேண்டும்.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி..