Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

69 Views

தமிழ் இனத்தின் முதல் எதிரி..!
அனைவருக்கும் வணக்கம்,

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அழுத குரலும், வடித்த கண்ணீரும் தாங்காத துயரத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. பிள்ளைகளையும், கணவனையும், வாழ்க்கைத்துணையையும் கொடிய யுத்தத்தில் பலி கொடுத்துவிட்டு ஆண்டுக்கொரு முறை இவ்வாறு கூடி அழுவதுதான் தமிழரின் தலைவிதியோ என்று இயலாமையோடு எண்ணத் தோன்றுகின்றது.

தமிழர் நடத்திய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தபோது, மீண்டுமொருமுறை தாயக விடுதலைக்கான போராட்டத்தை தமிழன் நினைத்தே பார்க்க முடியாதபடி ஆறாத வடுக்களோடு அவன் வாழ்ந்து சாக வேண்டும் என்று பொது எதிரி நம்பியிருப்பான்.

தாயக மண்ணில் தமிழரின் இருப்பை பறிக்கவும், குடிசனச் செறிவை சிதைக்கவும் பொது எதிரி ஆயிரம் திட்டங்கள் தீட்டி சாத்தியப்படுத்திய தந்திரோபாயங்களில் அகப்பட்டு தமிழர் திசைக்கு ஒருவராகிப்போனோம்.

கடல் வழியாக அவுஸ்திரேலியா போகலாம் என்று ஒரு கதையைப் பரவ விட்டபோது பல நூறு இளைஞர்கள் படகேறி கடல் பயணம் செய்தார்கள். அவர்களில் பலரை நடுக்கடலில் மடக்கிப்பிடித்து கழுத்தில் கயிறுகட்டி கடலில் இறக்கிவிட்டதாக ஒரு மர்மக்கதையும் உண்டு.

கடற்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தவர்கள் பொது எதிரியின் கைக்கூலிகள். அவர்கள் தமக்கு தரகுப் பணம் கிடைத்தால் போதும் என்று ஆசை வார்த்தைகள் கூறி இளைஞர்களை படகில் ஏற்றிவிட துணை நின்றார்கள்.

தமிழ் இனத்தின் ஆட்பலத்தை சிதைப்பதற்காக கண்ணுக்குத் தெரியாமல் வெளிநாட்டு ஆசை காட்டி தமிழரை நாடுகடத்தும் திட்டத்துடன்  பொது எதிரி செயற்படுகின்றான் என்பதை கைக்கூலிகளும் தெரிந்திருக்கவில்லை - தமிழ் மக்களும் புரிந்திருக்கவில்லை.

பல வழிகளில் தமிழர் தாயகத்தை சிதைத்து, உரிமைப் போராட்டத்தின் கூர்மையை முறித்துப்போட முயற்சிகள் நாசுக்காக நடந்தேறி வருவது ஒன்றும் பரமரகசியம் அல்ல!

வெளிநாட்டில் வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அயல் வீட்டானுக்கும் கூறாமல் நாட்டைவிட்டு போய்விடுவார்கள் என்பதுதான் தமிழ் மக்கள் தொடர்பான பொது எதிரியின் தற்போதைய புரிதலாக இருக்கின்றது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு பொது வாழ்வில் இணைக்க்பபட்டதாக கூறப்பட்ட 12000 பேரில் சுமார் 6000 பேர் குறித்து போதுமான தகவல் எதுவும் இதுவரை இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களாகப் பலரை தமிழ் மக்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். இலங்கை அரசின் தலைவர்களோ, அவ்வாறு யாரும் சிறைகளில் இல்லை என்பதை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

காணாமல் போனோர் அலுவலகத்தைக்கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் வற்புறுத்திலிலேயே இலங்கை அரசாங்கம் அமைத்தது. அந்த அலுவலகத்தின் பணி தமது உறவுகளைத் தேடும் தமிழ் மக்களுக்கு அவர்களது உறவுகள் இறந்துவிட்டார்கள் என்று கூறி அதற்கான சான்றுப்பத்திரத்தை பெற்றுக்அகொள்ளச் செய்வதுதான் என்று தமிழ் மக்கள் நம்பகின்றார்கள்.

இதுதவிரவும் கொடிய யுத்தத்தில் கணவனை பறிகொடுத்து வடக்கில் மட்டும் சுமார் 12000 குடும்பங்கள் சமூகத் தூற்றலுக்கும், புறக்கணிப்புக்கும், பொருளாதார வறுமைக்கும் முகம் கொடுத்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிள்ளைகளையும். வாழ்க்கைத் துணையையும் பறிகொடுத்தவர்களும், பெற்றோரை பறிகொடுத்த அநாதைகளும் தனிநபர்கள் நடத்தும் பராமரிப்பு நிலையங்களில் பல்வேறு துயன்பங்களுடனும், சுகாதார சீர்கேடுகளுடனும் வாழ்ந்து கெர்ணடிருக்கின்றார்கள்.

அரசுகள் கொடுத்த உதவிகளும், ஆங்காங்கே ஓரிருவர் தமது ஆத்ம திருப்திக்காக கொடுக்கும் நன்கொடைகளுமாக கிடைக்கப்பெறும் உதவிகளோடு தமிழ் இனம் கையேந்திகளாக போரின் வடுக்களைச் சுமந்தபடி வாழ்க்கையோடு போராடிக் கொண்டு இருக்கின்றது.

இதுதான் உலகத் தமிழினம் பெருமையோடு பேசிக்கொண்டு இருக்கும் தமிழர் தாயகத்தில் தமிழரின் வாழ்ககையாகும்.

இந்த அநாதரவு நிலையிலிருந்தும், கையேந்து நிலையிலிருந்தும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், தாயக நிலத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றுவதற்கும், எதிர்காலத்திலாவது தமிழர் பொருளாதார மற்றும் கல்வியின் பலத்தோடு முகம் உயர்த்தி வாழ்வதற்காக பொது வேலைத் திட்டம் ஒன்று வரையப்பட வேண்டும்.

உலக நாடுகள் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் என்று ஒரு மதிப்பீடு இருக்கின்றது. இவர்களில் 10 இலட்சம்பேர் மாதாமாதம் தலா 5 டொலரோ, அல்லது 10 டொலரோ சிறு உதவித் தொகையாக வழங்கி அந்த நிதியை ஒன்று திரட்டி வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக உயர்த்த முடியும். திட்டமிட்டு உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்பி தாயக தேசத்தை வளமான தேசமாக புதுப்பொழிவோடு தூக்கி நிறுத்தலாம்.

தமிழர்கள் நடத்திய அர்ப்பணிப்புக்கள் நிறைந்த விடுதலைப் போராட்டம் வெற்றியடையாமல் போவதற்கு பிரதான தடையாக இருந்தது தமிழர்களிடையே ஒற்றுமையின்மைதான்.

அகிம்சை வழிப்போராட்டத்தின் போதும் ஒற்றுமைப்படாத தமிழினம், ஆயுத வழிமுறைப் போராட்டத்திலும் ஒன்றுமைப்படாத தமிழினம் இப்போது போர் தந்த வடுக்களிலிருந்து விடுபடவும், வறுமையிலிருந்தும், துயரத்திலிருந்தும் முன்னேறுவதற்கும் ஒற்றுமைப்படுவது அவசியம் என்பதை காலம் வற்புறுத்திக்கொண்டிருக்கின்றது.

ஆனால் பாழாய்ப்போன அரசியல் தமிழர்களை பிரித்து திசைக்கு ஒரு குழுவாக வைத்திருக்கின்றது. இப்போது ஒற்றுமை பற்றியும், உரிமை பற்றியும் வாய் கிழிய கதைக்கும் எவரும் தமது அரசியல் சார்ப்பு நிலைமைகளை புறமொதுக்கிவிட்டு பொது வேலைத்திட்டத்துடன் ஒற்றுமைப்படுவதற்குத் தயாராக இல்லை என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.

கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வானது, தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை மீண்டுமொரு முறை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியிருக்கின்றது.

அங்கே தமிழ்த் தலைமைகள் எவரும் கூடியிருந்து அந்த நிகழ்வுக்கு பெறுமதி சேர்க்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால், அந்த நிகழ்வுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் அந்த நிகழ்வுக்கு கிடைக்கவேண்டிய உள்நாட்டு, வெளிநாட்டு அங்கீகாரமோ, அனுதாபமோ கிடைக்கவில்லை.

அரசியல் தலைவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவில் கலந்துகொள்வது பல்கலைக்கழக மாணவர்களினால் தடுக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் தலைவர்கள் என்போருக்குள் மக்கள் பிரதிநிதிகளும் அடங்குகின்றனர்.

மக்களின் பிரதிநிதிகளை பொது நினைவுகூரல் நிகழ்வில் தடுப்பதற்கான உரிமையை பல்கலைக்கழக மாணவர்களுக்கு யார் கொடுத்தது?! இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பல்கலை மாணவர்கள் அவமதித்திருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசியை அவமரியாதையாக வெளியேற்றியிருக்கின்றார்கள்.

ஜனநாயகப் போராளிகள் பற்றிய விமர்சனங்கள் தற்போது பல்வேறுபட்டவையாக இருக்கலாம். ஜனநாயகப் போராளிகள் களத்தில் நின்றவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பல்கலை மாணவர்கள் யாருக்கு, மாவீரர் தினத்திலும் முள்ளிவாய்க்கால் தினத்திலும் சுடரேற்றுகின்றார்களோ, அவர்களோடு தற்போதைய ஜனநாயகப் போராளிகளும் களத்தில் நின்றவர்கள். ஒருவேளை இவர்களும்; களத்தில் அன்று வீழ்ந்திருந்தால் இதே மாணவர்கள் இவர்களுக்கும்; விளகேற்றியிருப்பார்கள்.

இவ்வாறான பல்கலை மாணவர்களின் செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய யாழ்.பல்கலைகழகத்திற்கு இவ்வாறான செயற்பாடுகள் அபகீர்த்தியை ஏற்படுத்த கூடியன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, அடங்கிப்போன மக்களின் ஓலமாகவும், சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்ட சோகமாகவுமே நடந்து முடிந்துள்ளது.

உண்மையில் தமிழர்கள் ஒற்றுமையாகவும், தன் எழுச்சியோடும் ஒரு நிகழ்வை நடத்தினால் அதனை உலக மக்கள் உன்னிப்பாக உற்றுநோக்க வேண்டும்.

அங்கிருந்து கூறப்படுகின்ற செய்தி, யுத்த வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களினதும், விதையாகிப்போன தமிழர்களினதும் ஆத்மாக்களின் குரலாகவும் எழுச்சிமிகுந்த சத்திய வார்த்தைகளாக இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

மாறாக முள்ளிவாய்க்கால் செய்தியானது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் ஓலமாகவும், ஒப்பாரியாகவும் இருக்கக்கூடாது.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி -