Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

112 Views

அரசியல் தீர்விற்கு புதிய தனிநபர் பிரேரணை..?
அனைவருக்கும் வணக்கம்..!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தங்களை 20ஆவது திருத்தச் சட்டமாக தனிநபர் பிரேரணை ஒன்றின் மூலம் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த 25ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

அந்தப் பிரேரணையின் சாராம்சமானது, தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.

இந்தப் பிரேரணையை சமர்த்து உரையாற்றிய ஜே.வி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், தேசிய பிரச்சிணைக்கு அரசியல் தீர்வொன்றை உள்ளடக்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றுவதற்கு தற்போதைய சூழலில் சாத்தியமில்லாத நிலையில் குறைந்தபட்சமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையாவது இல்லாமல் செய்வதற்கே 20 திருத்தச் சட்டத்தை நாம் கொண்டுவந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவின் இந்தக் கருத்து தமிழ் மக்களை பொறுத்தவரை ஏற்கக்கூடியதாக இல்லை. தற்போதைய தேசிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஒன்றை கோரி மக்களிடம் ஆணை கேட்டபோது முக்கியமாக மூன்று வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதும், தேர்தல் முறைமையில் நாட்டுக்குப் பொறுத்தமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதும், தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக தீர்வொன்றைக்காண்பதும் அந்த வாக்குறுதிகளாக இருக்கின்றன.

அந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தேசிய ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக வாக்களித்தார்கள். அதிகாரத்திற்கு வந்த தேசிய அரசாங்கம், 100 நாட்கள் வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்தது.

அதைத் தொடர்ந்து 19ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தது. பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் நாட்டு மக்களுக்கு பயனுள்ள பரிந்துரைகளைவிடவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய சில அதிகாரங்களை குறைப்புச் செய்வதையும், பிரதமருக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டே அந்தப் பரிந்துரைகள் அமைந்திருந்தன.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தருவதாக கூறிய புதிய ஆட்சியாளர்களின் 100 நாட்கள் தேவைத்திட்டத்தில், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும், படையினர் அபகரித்து வைத்திருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான காணி நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கி அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது.

தேசிய அரசாங்கத்தினர் வழங்கிய மூன்று வாக்குறுதிகளில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டமானது, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைமை மாற்றத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் புதிய வட்டார முறைமையிலான தேர்தல் முறைமையானது, எதிர்பார்த்ததைவிடவும் பல பிரச்சனைகளையும், குறைபாடுகளையும் கொண்டிருக்கின்றது என்பதை இப்போது நடைமுறை வாயிலாகவே கட்சிகள் சந்தித்திருக்கின்றன.

இந்த நிலையில் தேசிய இனப்பிரச்சனைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக தீர்வொன்றை முன்வைப்பதில் பெரும்பாலும் அனைத்து சிங்கள கட்சிகளுக்கும் விருப்பமற்ற நிலைமையே காணப்படுகின்றது. ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் இவ்விடயத்தில் ஒரே தீர்மானத்திலேயே இருக்கின்றன. ஆனால் எல்லோரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை மேடைகளில் பொய்யாக சூளுரைக்கின்றனர்.

துரதிஷ்டவசமாக தமிழர் தரப்பிலும், புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் உரிமைகளும் நியாயங்களும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தும் எவ்விதமான முயற்சிகளும் இதுவரை எவராலும் எடுக்கப்படவில்லை.

எனவே தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் அரசியலமைப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது இயலாத காரியம் என்பதாலும், அத்தகைய முயற்சியை முன்னெடுக்க அடிப்படையில் விருப்பமில்லாத நிலையிலும் அதைவிடுத்து நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்தால் அதற்கு இன்றைய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரவாக இருப்பார் என்றும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினருக்கும் அந்தத் தேவை இருப்பதால் அவர்களும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ஜே.வி.பி கருதுவதால் தமது முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றார்கள்.

ஆகவேதான் அவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் 20 ஆவது திருத்த அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்திருக்கின்றார்கள். அந்த வரைபு தொடர்பாக நாடாளுமன்றம் சட்ட ஆலோசனைகளைப்பெற்று திருத்தங்களைச் செய்து விவாதத்திற்கு கொண்டுவரும் என்பதால் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் இனிச் சூடுபிடிக்கும்.

நிறைவேற்று அதிகாரத்தைக் இல்லாமல் செய்வதை தற்போதைய ஜனாதிபதி விரும்பாவிட்டாலும், அந்தச் சட்ட வரைபில் தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் நிறைவடைந்த பின்னரே இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதால் சற்று ஆறுதலடைந்துள்ளார்.

இதற்கிடையே நாட்டில் மும்மொழி அமுலாக்கத்தை புதிய அரசியலமைப்பின் ஊடாக முன்னெடுப்பதற்கு 21 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையை கொண்டுவரப்போவதாக தேசிய நல்லிணக்க சக வாழ்வு, மொழி அழுலாக்கல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சரின் கருத்தானது சாத்தியமாகாத ஒன்றாகும். அவர் வெறுமெனவே ஒரு ஊடகக் கவர்ச்சியைப் பெறுவதற்காக அவ்வாறு கூறியும் இருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு தமிழ்த் தரப்புகள் ஏன் நாடாளுமன்றத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஒன்றை கொண்டுவர முயற்சிக்கக்கூடாது என்பதையிட்டு தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஜே.வி.பியினர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் 20ஆவது திருத்த அரசியலமைப்பு திருத்த பிரேரணையை முன்வைக்க முடியும் என்றால், நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக ஒரு அரசியலமைப்பு திருத்த பிரேரணையைக் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது.

அவ்வாறு கொண்டுவந்தால் அதனை யார் யாரெல்லாம் எதிர்க்கின்றார்கள் என்பதை வெளிப்படையாக நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதோடு, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை வழங்குவதில்  தென்னிலங்கை எவ்விதமான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது என்பதையும் பகிரங்கப்படுத்தவும் முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்தால், அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் கட்சிகள் என சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு சிங்கள மக்களுக்கும், அரசுக்கும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்குரலுக்கான நியாயத்தை உணர்த்த முடியும்.

இதைச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு சுய நலமற்ற அரசியல் தற்துணிவு அவசியமாகும். மாறாக அதிகாரத்தில் உள்ளவர்கள் கோபித்துவிடக் கூடாது என்ற உள்ளுணர்வுடன் உப்புச்சபற்ற  இணக்க அரசியல் கோஷத்தை துாக்கிப் பிடித்துக் கொண்டு செயற்பட்டால் இதனை சாத்தியமாக்க முடியாது.

புதிய அரசியலமைப்பை அரசு முன்வைக்காவிட்டால், வடக்கு கிழக்கில் அரச நிர்வாக இயந்திரத்தை முடக்குவோம் என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அவர்களால் இலகுவாக செய்யக்கூடிய முயற்சியான தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வை முன்மொழியும் 21ஆவது அரசியலமைப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதைச் செய்யட்டும் என்று தமிழ் மக்கள் கேட்பது நியாயமான கேள்வியாகவே உள்ளது.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி -