Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

17 Views

குற்றவாளிகளுக்கு வெண்கம்பள வரவேற்பளிக்கும் விசித்திரம்!
அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் சட்டம் ஒழுங்கு வெகுவாக சீர்குலைந்து வருகின்றதா என்ற கேள்வி பல தரப்பாலும் முன்வைக்கப்படுகின்றது. அரசியல் ஸ்திரமற்ற தன்மைகள் அதிகரித்துவருகின்ற நிலையில் நாட்டில் மீண்டுமொரு நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுவருவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தெற்கு அரசியல் தலைமைகள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று விவாதிக்கும் அளவுக்கு, நாட்டில் தலைதூக்கி இருக்கும் பாதாளக் குழுக்களின் கொலைகள், கொள்ளைகள் தொடர்பாகவோ, போதைப் பொருட்களின் விநியோக செற்பாடுகள் தொடர்பாவோ அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.

அண்மையில் கதிர்காமம் கிரி வெஹர விகாரையில் விஹாரதிபதி பாதாள குழுக்களினால் கூலிக்கு கொலை செய்யப்பட்ட விவகாரமும், ஆங்காங்கே ஆணில் சடலம் கண்டெடுப்பு, வங்கியில் ஆயுதங்களைக் காட்டி நடத்தப்படும் கொள்ளைகள் என்பவும், போதைப் பொருட்களை தமது உடமையில் வைத்திருப்போர் என்று நாளாந்தம் தொடரும் கைதுகள் என்பனவுமே நாட்டின் தினசரி செய்திகளாகிவிட்டுள்ளன.

ஒரு காலத்தில் குண்டு வெடிப்புகளுக்கும், ஆயுதம் ஏந்தியோரின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கும், வெள்ளை வான் கடத்தல் மற்றும் கொலைகளும் மலிந்திருந்த நிலைமைகள் மாற்றமடைந்து இப்போது பாதாள உலகக் குழுக்களினதும், போதைப்பொருள் வியாபாரிகளினதும் சுதந்திரமான செற்பாடுகளுக்குள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளதால், நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமைகளான ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையே கலந்துரையாடி பொது முடிவில் செயற்படுவதாக தெரியவில்லை.

அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களோ ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டும், தூற்றிக்கொண்டும் தாம் பங்கிட்டுக்கொண்ட அமைச்சு அதிகாரங்களின் நிழலில் அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசியல் ஸ்திரமற்ற சூழலால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், இலங்கை நாணயப் பெருமதியின் வீழ்ச்சியும் அபாய மணியை அடிக்கத் தொடங்கிவிட்டன.

இன்றைய நிலையில் அமைச்சு பதவிகள் வழங்கப்படாவிட்டால் அடுத்த நாள் தமது கட்சிக்காரன் எந்தக் கட்சியின் கூடாரத்திற்குள் நுழைந்துவிடுவானோ என்ற அச்சத்திலேயே கட்சித் தலைமைகள் நடுங்கிக் கொண்டு இருக்கின்றன. இதனால் அமைச்சு, பிரதி அமைச்சு, இராஜாங்க அமைச்சு, என்று நாளாந்தம் அமைச்சர் நியமனங்கள் தொடர்கின்றன. நல்லாட்சி ஆட்சி தொடங்கி மூன்றரை வருடங்கள் நிறைவடைகின்றபோதும், இன்னும் அமைச்சு நியமனங்கள் நிறைவடைந்தபாடில்லை.

இதற்கிடையே கடந்த வாரம் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞான தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அதைத் தொடர்ந்து பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களும், பின்னர் ஞானசார தேரோவுக்கு நீதிமன்றம் வழங்கிய பிணையும் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு இருந்துவந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியது.

ஞானசாரர் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் உள்ளே அவர் தங்க வைக்கப்பட்டிருந்தது மருத்துவமனையிலேயே என்ற நிலையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் ஞானசாரருக்கு பிணைவழங்கியதுடன், வெளிநாட்டுக்குச் செல்லும் தடையையும் விதித்து விடுதலை செய்தது.

பிணையில் விடுதலை பெற்றுக்கொண்டு வெளியில் வந்த ஞானசார தேரோவை வெள்ளைக் கம்பளத்தில் நடக்கச் செய்து பூக்கள் தூவி ஏனைய பிக்குகளால் வரவேற்புச் செய்யப்பட்ட காட்சியைப் பார்க்கும்போது, அது அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் முகத்தில் கரியைப் பூசுவதுபோல் இருந்தது.

அத்துடன் எதிர்காலத்தில் பௌத்த பிக்குகள் என்ன செய்தாலும், அதற்கு எதிராக பேசுவதும், சட்ட உதவியை நாடுவதும் ஆபத்தான காரியங்களாகி விடுமோ என்ற அச்சத்தையும் நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு அந்த வரவேற்பு நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால் கிரிவிஹார விஹாராதிபதியின் கொலையில் சம்மந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படும் மற்றுமொரு விஹாராதிபதி, பாலியல் குற்றங்களுக்காக ஆங்காங்கே கைது செய்யப்பட்டுள்ள பிக்குகள் என்று குற்றவாளிகளாக சிறைகளில் இருக்கும் பிக்குகளும் தமக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தாம் கேள்விக்கு இடமில்லாமல் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் போராடக்கூடும்.

இவற்றைப் பார்க்கின்றபோது பிக்குகளின் அழுத்தத்திற்கு அரசும், நீதிமன்றமும் கட்டுப்பட்டுவிட்டதா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நம்பாத மக்கள் நீதிமன்றங்களை நம்புகின்றார்கள். நீதிமன்றங்களே மக்களின் இறுதி நம்பிக்கையாக இருக்கின்றது. அந்த நம்பிக்கையை இதுபோன்ற சம்பவங்கள் தகர்த்துவிடக்கூடாது.

பிக்குகளின் பௌத்தவாத போராட்டங்களும், ஞானசார தேரரின் கைதும், விடுதலையும் குழப்பங்களின் உச்சாமாகியுள்ள நிலையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸவினால் நடைமுறைப்படுத்தப்படும், 'செமட்ட செவன' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆத்மீக மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டு 'குளமும் - தாதுகோபுரமும்' 'கிராமும் - பௌத்த விஹாரையும்' என்ற எண்ணக்கருவினை முன்னிறுத்தி நாடுபூராகவும் அனைத்து மாவட்டங்களிலும், தாதுகோபுரங்களற்ற கிராமிய விஹாரைகளை அடையாளம் கண்டு புத்தசாசன பணியின் கீழ் 25 தாதுகோபுரங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், இத்திட்டத்தின் முதலாவது தாதுகோபுரத்தை அமைக்கும் பணியும் கடந்த 23ஆம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் 25 மாவட்டங்களிலும் தாதுகோபுரங்கள் அமைப்பது என்றால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களிலும், சிங்கள விஹாரைகள் முன்னர் ஒருபோதும் அமைந்திருக்காத மாவட்டங்களிலும் திட்டமிட்டவகையில் விஹாரைகளை அமைப்பதுதான் இந்த அமைச்சரின் உள்நோக்கமாக இருக்கின்றது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அதாவது 25 மாவட்டங்களிலும் என்றால் முழு நாடுமே பௌத்த நாடு என்பதையும், அதைச் சுற்றிலும் பிற்காலத்தில் சிங்களவர்களின் குடியேற்றங்கள் நடைபெறுவதற்கான திட்டமாகவுமே இதைக் கருதலாம்.

நல்லிணக்க அரசாங்கம் என்றும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் என்றும் இந்த அரசாங்கம் வெளியில் கூறினாலும், சட்ட ரீதியாக பௌத்த திணிப்பை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திணிப்பதையும், தமிழர் நிலத்தை சட்ட ரீதியாக அபகரிப்பதையும் நேர்த்தியாக செய்து வருவதை தமிழ் மக்கள் உணராமலில்லை.

இதுபோலவே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் தமிழ் மக்களின் பரந்தளவான குடியிருப்பைத் தடுக்கும் எண்ணத்துடன் அரசகாணிகள் பலவற்றை அது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அண்மையாக இருந்தாலும், பிரதான வீதிகளுக்கு அண்மையிலும், பெருங்காடுகள் அற்ற பகுதிகளாக இருந்தாலும், வணக்கஸ்தளங்களாக இருந்தாலும் அவற்றை வன இலாக்காவின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்றும், தொல்பொருள் ஆய்வுப் பிரதேசம் என்றும் கூறி ஒருவகையான அபகரிப்பை அரசு செய்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறான உள்நோக்கச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் மக்கள் அரசின் திட்டமிட்ட செயற்பாடாகவே கருதுகின்றனர். இவை எல்லாம் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் அதை நாடாளுமன்றத்தில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்துக் கேள்வி எழுப்புவதாக இல்லை.

அதுபோல் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத போதும் அரசியல் கட்சிகளாக மக்கள் மத்தியில் செயற்படும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இனம் சார்ந்து அவதானத்துடன் கவனிக்க வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு, அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டு அமைப்பதும், மக்களுக்கு எதைக்கூறி வாக்குச் சேர்ப்பது, யாரைத் துரோகியாக்கி விடுவது, என்பதும், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று வாய்ச்சவடால் விடுவதன் ஊடாக தம்மை வீரபுருஷர்களாக காட்ட எத்தனிப்பதுமாக தமிழ் அரசியல் தலைமைகள் படுபிற்போக்குத் தனமான அரசியலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி