Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

ஆனந்த சுதாகரனும் எமது அரசியல்வாதிகளும்

பர்மாவில் ரோஹியங்கா முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒரு ஐ.நா அதிகாரி, பர்மாவில் முகநூல் ஒரு மிருகமாகக் காணப்படுகின்றது என்று கூறினார்.  முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் முகநூல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சித்திரிப்பதற்கே அவர் அதை ஒரு மிருகம் என்று சொன்னார்.

இலங்கைத்தீவிலும் சில கிழமைகளுக்கு முன்பு அம்பாறையிலும், கண்டியிலும் இடம்பெற்ற தாக்குதல்களில் முகநூல், வைபர் போன்றன தீய வழிகளில் பயன்படுத்தப்படுவதாகக் கூறி அரசாங்கம் அவற்றைத் தடைசெய்திருந்தது. ஆனால் முகநூலும், வைபரும் ஏனைய சமூகவலைத் தளங்களும் நன்மைகளையும் செய்ய முடியும் என்பதற்கு ஆகப்பிந்திய ஓர் உதாரணம் ஆனந்தசுதாகரன் என்ற அரசியல்கைதியின் விவகாரமாகும்.

ஒரு புகைப்படம் ஒரு பெரிய மனிதாபிமான அலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதைத் தொட்டு அரசியல்வாதிகளும், கருத்துருவாக்கிகளும், படைப்பாளிகளும், ஊடகவியலாளர்களும் அவரவர் பங்கிற்கு அக்கைதியின் விவகாரத்தை ஒரு பெரிய மனிதாபிமான விவகாரமாக மாற்றியிருக்கிறார்கள்.

ஒருபுறம் அவருடைய விடுதலையை வேண்டி கையெழுத்துச் சேகரிப்பு நடக்கிறது. இன்னொரு புறம் சில செயற்பாட்டாளர்கள் தாமாக முன்வந்து அக்கைதியின் குழந்தைகளுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வடமாகாண ஆளுநரை அக்குழந்தைகள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். வேறு சிலர் அக்குழந்தைகளை அரசுத்தலைவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அரசுத்தலைவரும் விவகாரத்தை சாதகமாகப் பரிசீலிக்கப் போகிறார் என்றவாறாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரன், ஆனந்தசுதாகரன் தொடர்பில் அரச உயர்மட்டத்தோடு உரையாடியிருப்பதாகக் கூறுகிறார். இது விடயத்தில் பொது மன்னிப்பைக் கேட்பதற்குப் பதிலாக தனிப்பட்ட மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பொது மன்னிப்பைக் கேட்டால் போர்க்குற்றம் செய்தவர்களும் மன்னிக்கப்படும் ஒரு நிலை வரலாம் என்பதனால் அவ்வாறு கேட்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

இப்படியாக ஆனந்த சுதாகரனின் விவகாரம் ஒரு பெரிய மனிதாபிமான அலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் விளைவாக அக்கைதிக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடும். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் அது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல என்பதுதான்.

அது முழுக்க முழுக்க ஓர் அரசியல் விவகாரம். அதில் ஒரு மனித அவலமும் உண்டுதான். ஒரு ஆனந்தசுதாகரனின் மனைவி இறந்தபடியால் அவருடைய விவகாரம் ஊடகங்கள் வழியாக ஒரு மனிதாபிமான அலையைத் தோற்றுவித்திருக்கிறது. ஆனால் அவரைப் போலப் பலர் இப்பொழுதும் சிறையில் இருக்கிறார்கள். தண்டனை வழங்கப்பட்டவர்களாகவும், விசாரிக்கப்படுவோராகவும், வழக்குகள் முடியாதவர்களாகவும் பலர் உண்டு.

அவர்கள் மட்டுமல்ல புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு தண்டனையா – இல்லையா? என்பது தீர்க்கப்படாத ஒரு சட்டப் பிரச்சினையாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

இலங்கைத்தீவில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு தரப்பாகவும் ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தரப்பாகவும் தடுப்பில் இருந்து வந்தவர்கள் காணப்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களில் ஒருவரே ஆனந்தசுதாகரன். எனவே அவருடைய பிரச்சினை தனிய ஒரு மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல. அது முழுக்க முழுக்க ஓர் அரசியல் பிரச்சினை. அதை அரசியற் பிரச்சினையாக்க வேண்டியது தமிழ்த் தலைவர்கள்தான். அதற்குப் பொருத்தமான ஒரு சட்டத்தீர்வைக் காணவேண்டியதும் தமிழ்த் தலைவர்கள்தான்.

தமிழ்த் தலைவர்களில் பலர் சட்டத்தரணிகளாக இருக்கிறார்கள். அரசாங்கத்தை ஆதரிக்கும் சம்பந்தரும் ஒரு சட்டத்தரணிதான். தமிழ் எதிர்ப்பு அரசியலில் கூர்முனைபோலக் காணப்படும் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் சட்டத்தரணிகள்தான்.

அரசியல்கைதிகளின் விவகாரம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபட்டுச் செல்கிறது. அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக்கோரி பல தடவைகள் உண்ணாவிரதமிருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் தமிழ்த் தலைவர்கள் சிறைக்குப் போய் வாக்குறுதி கொடுத்து அந்த உண்ணாவிரதங்களை நிறுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் யாராலுமே அதற்குத் தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் முடியவில்லை?

ஏனெனில் அதை அவர்கள் தொடர்ந்தும் சட்டப்பிரச்சினையாக அணுகுவதுதான். அதை ஒரு சட்டப்பிரச்சினையாக அணுகுவது தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் பொறிக்குள் நின்று கொண்டு அதற்குள் இருந்து தப்புவதற்கான ஒரு தீர்வைத் தேடுவதைப் போன்றது. ஏனெனில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளவரை அதை ஒரு சட்டப்பிரச்சினையாக அணுகி தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை கொண்டு வரும்பொழுது அதற்கு ஆதரவாகக் காணப்பட்ட தமிழ்த்தலைவர்களின் வாரிசுகளே இப்பொழுதும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அப்பொழுது தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திற்கு சிலையும் திறந்து வைக்கிறார்கள். இவர்களால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்ற முடியுமா?

2015ம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தின்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றுவது அல்லது அனைத்துலக தரத்திற்கேற்ப திருத்துவது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் திருத்தப்பட்ட வரைபு ஏற்கெனவே இருப்பதைவிட பயங்கரமானது என்று சுமந்திரனே கூறுகிறார்.

எனவே முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு தமிழ்த்தலைவர்கள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின் அரசியற்கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்டப் பிரச்சினையாகவன்றி அரசியற் பிரச்சினையாக அணுக வேண்டும். அதற்குத் தமிழ்ச் சட்டநிபுணர்கள் சட்டச் செயற்பாட்டியக்கங்களை உருவாக்க வேண்டும்.

எத்தனை தமிழ் ச்சட்டத்தரணிகள் அதற்குத் தயார்?அதைசெய்ய விக்னேஸ்வரன் தயாரா – பேரவை தயாரா? பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவது என்பதை முதலில் அதில் இருந்து தொடங்கலாம் ஏனெனில் அது விக்னேஸ்வரனின் துறை சார்ந்த ஒரு செயற்பாடு.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்துவது அல்லது நீக்குவது என்பது முழுக்க முழுக்க ஓர் அரசியற் பிரச்சினைதான். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவரின் எதிர்காலம் எனப்படுவதும் ஓர் அரசியற் பிரச்சினைதான். புனர்வாழ்வு ஒரு தண்டனையா – இல்லையா? என்பதும் ஓர் அரசியல் விவகாரம்தான்.

எனவே இவை எல்லாவற்றையும் ஓர் அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். அவற்றிற்கு அரசியல் தீர்வையே காண வேண்டும். அத்தீர்வின் மூலம் வேண்டுமானால் சட்டச் சிக்கல்களை முடிச்சவிழ்க்கலாம்.

ஆனால் கொடுமை என்னவென்றால், இவற்றை அரசியல் விவகாரமாக அணுகுவதற்கு தமிழ்த் தலைவர்களால் ஒன்றில் முடியவில்லை அல்லது அவர்கள் தயாரில்லை. அல்லது அதற்கு வேண்டிய கெட்டித்தனம் அவர்களிடம் இல்லை. என்பதனால்தான் திறப்பு என்னிடம் இல்லையென்று சம்பந்தர் சொன்னாரோ தெரியாது.

கைதிகள் உண்ணாவிரதம் இருக்கும் போதெல்லாம் அதை நிறுத்துவதற்காக வாக்குறுதிகளை வழங்கிய தமிழ்த்தலைவர்கள் அனைவருமே சிறைச்சாலை வாசலைத் தாண்டியதும் அந்த வாக்குறுதிகளை மறந்து விடுகிறார்கள்.

கடைசியாக கடந்த ஆண்டு அரசியற் கைதிகளுக்காக நடந்த போராட்டத்தின்போது தமிழ் அரசியற்களத்தின் செயலின்மையும், கையறு நிலையும், கோமாளித்தனமும் ஒன்றாக வெளிப்பட்டன. அப்போராட்டத்தை முதலில் முன்னெடுத்தது சில செயற்பாட்டு அமைப்புக்கள். அவர்கள்கூட அதைத் தாமாக முன்னெடுக்கவில்லை.

சில கைதிகள் உண்ணாவிரதமிருக்கப் போய் மேற்படி அமைப்புக்கள் அதில் தலையிட்டன. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் போராட முடியவில்லை. ஏற்கெனவே பிரபல்யமாக இருந்த அரசியல்வாதிகள் அப்போராட்டத்தை சுவீகரிக்கப் பார்த்தார்கள். சிலர் திசைதிருப்பினார்கள். ஆளுநரோடும், அரசுத்தலைவரோடும் பேசினால் தீர்வு கிடைக்குமென்று கைதிகளின் குடும்பங்களை நம்பச்செய்தார்கள்.

இடையில் யாழ் பல்கலைக்கழகம் களத்தில் இறங்கியது. தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் அது உச்சக்கட்டமாக இருக்க வேண்டுமென்று அவர்கள் கூறிக்கொண்டார்கள். ஆனால் உச்சக்கட்டம் வராமலேயே நாடகம் முடிந்து விட்டது.

ஒரு அவலச்சுவை நாடகத்தை தமிழ் அரசியல்வாதிகள் நகைச்சுவை நாடகமாக முடித்து வைத்தார்கள். அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அப்போராட்டத்தில் காணப்பட்டமை என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டமாகும். நாடகம் முடிந்த பொழுது வழமை போன்று கைதிகள் மறக்கப்பட்டு விட்டார்கள்.

இப்பொழுது ஆனந்தசுதாகரனின் விவகாரத்தில் ஒரு புதிய நாடகம் மனிதாபிமான நாடகம் மேடையேற்றப்படுகிறது. இந்தப் பிரச்சினையின் அரசியலை நீக்கிவிட்டு ஒரு கைதியை தனித்தெடுத்து மனிதாபிமானம் பேசப்படுகிறது. மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்படியே வைத்துக்கொண்டு மனிதாபிமானம் பேசப்படுகிறது.

அதை ஓர் அரசியல் பிரச்சினையாக, போராட்டமாக முன்னெடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் ஒரு தனிக்கைதியின் விடுதலை வேண்டி கையெழுத்துப் போராட்டம் நடாத்துகிறார்கள். அரசுத் தலைவரின் மன்னிப்பின் மூலம் ஆனந்த சுதாகரனை விடுவிப்பது என்பது ஓர் அரசியல்தீர்வு அல்ல.

அவரைப் போன்ற அனைவரையும் விடுவிக்க வேண்டும். அதற்கு அரசியல் கைதிகள் தொடர்பில் ஓர் அரசியற் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு ஒரு தண்டனையா – இல்லையா? என்பததைக் குறித்து ஓர் அரசியற் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஓர் அரசியற் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அதாவது அரசாங்கத்திற்கும், தமிழ்த் தரப்பிற்குமிடையே ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த அரிவரி கூடத் தெரியாத தமிழ்த் தலைவர்கள் ஆனந்தசுதாகரனின் விவகாரத்தை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக மட்டும் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களையும், அரசியல் கைதிகளையும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலாந்தன்
அரசியல் ஆய்வாளர்

WEEKLY SPECIAL

பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

பிழைகளற்ற பயணம்

அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்

வள்ளலாக மாறிய ஒரு கேணல்