Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

பெரியார் மண்ணில் ஸ்டாலினின் விஸ்வரூபம்..

பகுத்தறிவுப் பகலவன் திராவிடதின் தனித் தலைவர் தந்தை பெரியார், பிறந்த ஈரோட்டு மண்ணில் இந்த வாரம் நடந்த தி.மு.க.வின் மண்டல மாநாடு, அந்தக் கட்சியின் அண்மைய மாநில மாநாடுகளை விஞ்சும் அளவிற்கு களை கட்டி பெரு வெற்றி பெற்றுள்ளது.

1. தமிழ்நாடு அரசியல் அரங்கில் கலைஞர் செயற்பாட்டில் இல்லாத நிலையில் தி.மு.க.வின் செயற்பாடுகள் மீது மக்களுக்கு இருக்கும் ஒருவித மனக்குறை.

2. இப்போது கிளம்பியுள்ள நடிகர்களின் மின்னொளிக் கட்சிகளால், தி.மு.க.வின் வாக்கு வங்கிக்கு ஏற்படக்கூடிய இழப்பு.

3.  ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் வைப்புத் தொகையைகூட பறிகொடுத்த பரிதாபம்.

4.  அம்மா அற்ற அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டை கடத்திவிட்ட நிலையிலும் அதனை அசைக்கும் முயற்சிகூட இல்லையே என்கிற சலிப்பு.

5. தி.மு.க. பலவீனமாக இருக்கும் மேற்கு மண்டலமான கொங்கு மண்டல மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கட்சியை வளர்க்காமல் தங்களை மட்டுமே வளம் கொளிக்க வைத்துக் கொள்வதாக எழுந்துள்ள புகார்கள்.

இப்படி ஏராளமான சிகல்கல்கள் உள்ள நிலையிலும் இந்த மாநாட்டை வெற்றிபெறச் செய்த பெருமையின் பெரும் பகுதி அதன் செயல் தலைவர் ஸ்டாலினையே சாரும். தி.மு.க பலவீனமாக இருக்கிறது என்று சொல்லப்படும் மேற்கு மண்டலத்தின் ஈரோடு நகரைத்தான் இந்த மண்டல மாநாட்டுக்குத் தேர்ந்தெடுத்திருந்தார் தளபதி ஸ்டாலின்.

தந்தை பெரியாரின் மண், அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் பெரியாரிடம் பயிற்சி பெற்று வளர்ந்த மண். என்கின்ற பெருமைகளைப் பெற்ற ஈரோடு மண், இந்த முப்பெரும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரிசையில் திராவிடத்தின் நான்காம் தலைவர் என்கின்ற பெருமித அடையாளத்தை மு.க. ஸ்டாலினுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அண்மையில் நடந்த சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி அறுபது ஆண்டுகள் மற்றும் முரசொலி பவளவிழா ஆகியவற்றுக்கு தேசியக் கட்சித் தலைவர்களை தி.மு.க. அழைத்திருந்தது. ஆனால், இந்த மண்டல மாநாடு முழுக்க முழுக்க தி.மு.க. தொண்டர்களின் எழுச்சியைக் காட்டும் மாநாடாக இருக்க வேண்டுமென்பதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எவரையும் அழைக்காமலே நடத்தப்பெற்ற மாநாடு ஆகும்.

கோவை.செழியன் பேசியபோது, “தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு இந்த மண்டல மாநாட்டின் கொடியை ஏற்றும் வாய்ப்புக் கிடைத்தது பெரும்பேறு. திராவிட இயக்கத்தில் அதுவும் தி.மு.க.வில் மட்டும்தான் சாமானியனான என்னைப் போன்றவர்கள் இதுபோன்ற மேடைகளில் ஏறமுடியும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்

தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கப்பட்ட போதிலிருந்தே ஸ்டாலினுடன் பயணித்துவரும் திருச்சி சிவா, “தமிழ்நாடும் தி.மு.க. தொண்டர்களும் ஸ்டாலினுக்கு இரு கண்கள் போன்றவை. இந்த இரண்டில் இருந்தும் நீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கு நாங்கள் குருதியையும் வியர்வையையும் தருவோம்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார். ஸ்டாலினை உயர்த்தியும் அவர் ஆற்ற வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டும் வகையிலும் அமைந்திருந்த அவர் உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.

25ஆம் தேதி காலை மாநாட்டு நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழ்நாடே தடைப்படும் அளவுக்கு தி.மு.க. போராட்டம் நடத்தும்” என்னும் சிறப்புத் தீர்மானத்தை வாசித்தார் மாநாட்டை ஆரமப்பித்து வைத்த மு.க.ஸ்டாலின்.

முதல் நாள் மூன்று லட்சமாக இருந்த மாநாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை இரண்டாம் நாளில் இருமடங்காகி வெற்றிடமே இல்லாமல் மாநாட்டுப் பந்தலையும் வளாகத்தையும் திக்குமுக்காட வைத்தன.

திராவிட இயக்கத்தின் லட்சியம், தி.மு.க.வின் கொள்கை, ஸ்டாலின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் என ஐம்பது தலைப்புகளில் இடம் பெற்ற சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள் அனைத்தும் கனகச்சிதமாக அமைந்திருந்தது.

கலைஞர் கருணாநிதி கலந்துகொள்ள இயலாத இந்த மண்டல மாநாட்டில் நிறைவுப் பேருரை ஆற்றிய தி.மு.கவின் செயல் தலைவர், கலைஞரைப்பற்றி உருக்கமாகவும் தி.மு.க.வின் கொள்கைளைப்பற்றியும் உணர்வுபூர்வமாக பேசியவர், கலைஞர் பாணியில் ஐந்து முழக்கங்களை வெளியிட்டு தேர்தலுக்குத் தயாராகுமாறு பலத்த கரகோசத்தின் மத்தியில் கட்சியினரை உற்சாகப் படுத்தினார்.

சமுக நீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி இவைதான் ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கம். அதையும் தாண்டி கொங்கு பகுதியான மேற்கு மண்டலத்தில் உதயசூரியன் மீண்டும் உதிக்கும் என்கிற நம்பிக்கையை உடன்பிறப்புகள் மத்தியில் விதைத்திருக்கிறது மண்டல மாநாடு எனலாம்.

இயற்கையின் சூரியனை மேற்கில் உதிக்க வைக்க முடியாது ஆனால் தி.மு.க வின் சூரியனை மேற்கில் மட்டுமல்ல எங்கும் உதிக்க வைக்க முடியும் என்கின்ற நம்பிக்கையை கழக உடன் பிறப்புகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின் இந்த மாநாட்டின் மூலம் என்கின்றனர் தி.மு.க. தொண்டர்கள்.

இந்த நம்பிக்கையை செயலில்காட்டி,  கோட்டை விட்ட சென்னைக் கோட்டையை மீட்டு, கலைஞரின் முதல்வர் கதிரையில் ஸ்டாலினை உட்கார வைக்கும் வகையில் தி.மு.க. வின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

-அறமொழியான்

WEEKLY SPECIAL

பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

பிழைகளற்ற பயணம்

அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்

வள்ளலாக மாறிய ஒரு கேணல்