Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

பேரத்தில்  பேராசிரியை... பின்னணியில் ஆளுனர்... அச்சத்தில் பெற்றோர்... பெரியார் மண்ணின் அவலம்...

உயர் கல்விக்காய் காத்திருக்கும் இளம் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை, கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தை  தடவிய ஆளுனர் இவையே இன்றைய தமிழகத்தின் அதி உச்ச பேசுபொருள்.

பொருளாதார ரீதியான பின்னடைவினால் உயர்கல்வியை கனவாகவே கொண்டு வாழும்  இளம் மாணவிகளை  நிறையவே கொண்டுள்ள இன்றைய தமிழக கல்விச் சூழலில்  கல்லூரி ஒன்றில்  படிக்க வந்த மாணவிகளிடம், பணத்தாசை, உயர் கல்வி ஆசை என்பவற்றை முன்னிறுத்தி  பேராசிரியை ஒருவரே பாலியல்  பேரம் பேசுவது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்துக்குகே பெரும் அவமானத்தையும்  தலைகுனிவையும்  ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் கைது செய்யப்பட்டுள்ள அந்த பேராசிரியை முன்னிறுத்தும் முக்கியஸ்தர்களில் ஒருவரான தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் அவர் தடவிய செயல் இன்றைய தமிழக அரசியலின் அருவருப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டதில் உள்ள அரும்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் தமது மாணவிகள் சிலருடன் பாலியல் பேரம் பேசிய தொலைபேசி உரையாடலில் ஆளுநர் குறித்தும் கூறியிருப்பதுடன் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் நெருக்கமாகவும் காணப்பட்டுள்ளார் அந்தப் பேராசிரியை.

ஏற்கனவே, தமிழக உயர்கல்வித்துறை என்பது ஊழல் மயமாகியுள்ள சூழலில், தற்போது பாலியல் குற்றச்சாட்டிலும் சிக்கியுள்ளதானது ஒட்டு மொத்த கல்வித்துறைக்கே  பெரும் அவமானமாகும். பேராசிரியர் மற்றும் ஊழியர் பணியிட நியமனங்களுக்கு பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உயர்கல்வித்துறையில்  நீண்ட காலமாக உள்ளது. பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, சமீபத்தில் லஞ்ச  ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசாராம், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் என பலருக்கு  சொந்தமான இடங்களில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 கோடி ருபா மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின.  சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக வணங்காமுடி பதவி வகித்த போது  ஏராளமானோருக்கு முறைகேடாக சட்டப் படிப்பில் சேர்க்கை  வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

வணங்காமுடி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில்  95 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இப்படி பல சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் தமிழக உயர்கல்வித்துறையில், தற்போது மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பேராசிரியை ஒருவர் அழைக்கும் செயல், பெற்றோர்களின்  மத்தியில் பெரும் அச்சத்தையும், ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது. படிக்க வரும் மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் இந்த ஈனச் செயலுக்கு ஆளுனரும் உடந்தையா…? என்கின்ற கேள்வி அச்ச உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.

இப்பிரச்சினையின் மூலவேரான தொலைபேசி உரையாடலில், மாணவிகளுக்கு மூளைச்சலவை செய்யமுனையும்  பேராசிரியை,  கவர்னரிடம் தனக்கு இருக்கும்  நெருக்கம் குறித்து மிக சர்வசாதாரணமாக பேசுகிறார்.

எனவே, இதன் பின்னணி முழுமையாக கண்டறியப்பட வேண்டும் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை மட்டுமின்றி இதன் பின்னணியில் உள்ள  பல்கலைக்கழக பெரும்புள்ளிகள், உயர் அதிகாரிகள் என அனைவரையும்  கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த கோரிக்கையாக இருக்க ஆளுனர், பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் லட்சுமி சுப்ரமணியனின் கன்னத்தில் தடவிய செயல் அவர் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

இது குறித்து, தி வீக் பத்திரிகையின் அந்த நிருபர் ஆளுனரின் அந்த செயல் தன்னை மிகவும் அருவருப்படைய வைத்ததாகவும் . தனது கேள்விக்கு பதில் அளித்திருக்க வேண்டும், இல்லையென்றால் பேசாமல் சென்றிருக்க வேண்டும், அதைவிடுத்து, கன்னத்தை தடவுவது எப்படி பதிலாக இருக்க முடியும், இப்போதும் எனது கன்னத்தை துடைத்துக் கொண்டிருக்கிறேன், அவர் செய்த செயலை என்னால் நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை, முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் அப்படி நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல கவர்னர் அவர்களே… என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

“உன் கேள்வி ரொம்ப சிறப்பா இருந்திச்சு. உன்னை என் பேத்தி மாதிரி நினைச்சுத்தான் கன்னத்தில் தட்டினேன்”. இவ்வாறு  பத்திரிகையாளர் லட்சுமி அவர்களிடம் ஆளுநர் புரோகித் வருத்தம் தெரிவிக்க . ‘உங்கள் வார்த்தைகள் என்னை திருப்திப்படுத்தாவிட்டாலும், உங்கள் மன்னிப்பை ஏற்கிறேன்’ என அந்த பத்திரிகையாளர் லக்‌ஷ்மி சுப்பிரமணியம் பெருந்தன்மையோடு அதை ஏற்றுள்ளார்.

பேராசிரியை நிர்மலாதேவி விடயத்தில் தன் மீதான குற்றச்சாட்டு பொய் எனச் சொல்வதற்காக கவர்னர் புரோகித் கூட்டிய இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி இன்னொரு சிக்கலில் மாட்டியுள்ளார் அவர்.

புரோகித் தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிறது. இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தாத அவர் அமைச்சரவை பதவியேற்பு போன்ற மிக முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெறும் கவர்னர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் செய்தியாளர் சந்திப்பை  நடத்தியிருக்கிறார்.

அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து அங்கே கேள்வி எழுப்பப்பட்டபோது, சம்பந்தமே இல்லாமல் நான் பேரன், பேத்தி எடுத்தவன் என்று கூறினார். இதுகுறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா…? என்று கேட்டால், தேவைப்பட்டால் அதற்கு உத்தரவிடும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன் என்றார்.

மாநிலத்தில் நடக்கும் ஒரு விடயம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் மாநில அரசின் கையில் இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது குறித்து மாநிலத்தின்  முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ அமைதி காத்தபடி அமர்ந்துள்ளனர் பதவி நாற்காலிகளை கெட்டியாக பிடித்தபடி.

ஒருபுறத்தில், தமிழக காவல்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஏழு மணி நேரம் நிர்மலா தேவி வீட்டின் வாசலில் தவம் கிடந்து, அவர் விதித்த நிபந்தனைகளை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு காவல்துறை அவரை கைது செய்திருக்கிறது. விசாரணையில், அவர் பல முக்கிய புள்ளிகளின் பெயர்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எதுவும் வெளிவரவில்லை.

மறுபுறத்தில், உண்மையை வெளியே சொல்லி அந்த உரையாடலை வெளியிட்ட அந்த  நான்கு மாணவிகள் யார் என்று வகுப்பறைக்கே சென்று தேடுகிறது சம்பந்தப்பட்ட  கலைக் கல்லூரி நிர்வாகம். அந்த வகுப்பின் மாணவிகள் அனைவரும்  நாங்கள்தான் அது என ஒட்டுமொத்தமாக கர்ஜித்துள்ளனர்.

மாநில காவல்துறை வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, ஆளுநர் தன்னிச்சையாக ஒரு நபர் குழுவை அமைப்பது ஏன்…? விசாரணையை சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டதா…? இப்படி பல கேள்விகள் இந்த விடயத்தில் தொக்கி நிற்கின்றன.

காவிரி விவகாரம் உட்பட பல விடயங்களில் தமிழகத்தை வஞ்சித்து வரும் மோடி அரசினால் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்தான் இந்த ஆளுனர். ஆளுநர் மாளிகையின் மீது படிந்துள்ள கரும் நிழல்களை களைந்து விட்டு  அவர் பதவி விலகுவதே விசாரணை நியாயமாக நடைபெற உதவியாக இருக்கும். தமிழ்நாட்டுக்கே வேந்தர் போல நினைத்துக் கொண்டு செயல்படும்  ஆளுநரே திரும்பிப்போ என தமிழகம் முழங்க வேண்டிய நேரம் இது.

WEEKLY SPECIAL

இலங்கையில் மீண்டும் மகிந்த யுகம்?!

விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்!

இலங்கையில் மீண்டும் மகிந்த யுகம்?!

விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்!

மரண தண்டனை போதையை ஒழிக்குமா?

விஜயகலாவின் பேச்சு

புத்தகப் பிரியன் அனலனின் காதல்…