Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

முன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்

மூன்று நாள் மட்டுமே முதல்வராக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா அவர் சார்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசின் அதிகரிக்கும் அடாவடிகள் என்பனவே இன்றைய இந்தியாவின் பேசு பொருட்கள்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் ஆட்சி அமைப்பதற்கான சர்ச்சை இன்று வரை தீரவில்லை.

பல சமூகங்களை சேர்ந்த மக்கள் வாழும் கர்நாடக அரசியலில் ஆற்றல வாய்ந்த சமூகங்களாக லிங்காயத் சமூகமும் ஒக்காலிகா என்கின்ற சமூகமுமே பரிணமிகின்றன. மொத்த மக்கள் தொகையில் லிங்காயத் 10 சதவிகிதமும் ஒக்காலிகா 10 சதவிகிதமுமே இருந்தாலும் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளிலும் இந்த இரண்டு சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களே கடந்த தேர்தலில் நிறைந்திருந்தனர்.

இதில் பா.ஜ.க வின் முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா லிங்காயத் சமுகத்தைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் தேவகௌடா ஒக்காலிகா சமுக சார்பாளராகப் பார்க்கப்படுகிறார்.

பா.ஜ.க கட்சியானது லிங்காயத், இந்துத்துவாத பலத்தை நம்பியும் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர், தலித் மற்றும் இன்னபிற பிற்படுத்தப்பட்டோர் பலத்தை நம்பியும் தேர்தலில் களத்தில் இறங்கின. முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி, ஒக்காலிகா சமுகத்தை நம்பி களம் கண்டது.

தென் கர்நாடகா பொதுவாக காங்கிரசுக்கு முன்னிலை அளிக்கும் பகுதி என்றும் வட கர்நாடகா பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் பகுதி என்றும் பார்க்கப்பட்டது. தேவகௌடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் வெற்றிபெறும் எண்ணிக்கையானது பா.ஜ. க ஆட்சி அமைக்கவே உதவும் என தேர்தலுக்கு முன்னர் பலராலும் வெளிப்படையாகத் தெரிவிக்கபட்ட கருத்தாக இருந்தது.

கர்நாடக அரசியலில் சைவ மடங்கள் பெரும் ஆற்றல் வாய்ந்தவை. லிங்காயத், ஒக்காலிகா, குரும்பா, மடிகா என பல்வேறு சாதிகளுக்கும் தனித் தனியே மடாலயங்கள் உண்டு. அவற்றின் தலைவர்களாக உள்ள சாமியார்கள் மாநிலத்தின் அனைத்து தேர்தல்களிலும் ஒரு முக்கிய அங்கமாகவே விளங்குவர்.

பொதுவாக பொதுத் தேர்தல்களில், ஆளுங்கட்சி வெற்றி பெறாது என்பதே பொதுக்கருத்தாக இருக்கும். ஆனால் அந்தப் பேச்சு இந்தத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் எங்குமே ஒலிக்கவில்லை. அந்தக் கருத்தை காங்கரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா மாற்றிக் காட்டினார்.

லிங்காயத் இனத்தவரிடையே நீண்ட காலங்களாக முன் வைக்கபட்ட தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை முதலமைச்சராக இருந்த சித்தராமையாவினால் நிறைவேற்றி வைக்கப் பட்டது.

இது பா.ஜ.காவின் வெற்றியை பாதிக்கும் சூழல்கள் இருப்பதாகப் பேச்சுகள் எழுந்தன. அதேபோல சித்தராமையா அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவருக்கான ஆதரவை தக்க வைத்திருந்தன. முன்னைய முதல்வர் பா.ஜ.காவின் எடியூரப்பா அரசுமீது ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள்போல் சித்தராமையா அரசுமேல் பெரிய குற்றச் சாட்டுகள் எதுவும் எழவில்லை.

நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி பா.ஜ.க புதுமையான பரப்புரையில் முழுவீச்சில் இறங்கியது. இணைய இணைப்புகள் மொபைல் போன்கள் என அனைத்திலுமே பா.ஜ.கா விளம்பரங்கள் விழுந்த வண்ணமே இருந்தன.

பிரதமர் மோடி, அமித் ஷா, எடியூரப்பா ஆகியோரின் சிரித்த முகங்களே அனைத்திலும் தென்பட்டன . செய்திச் சாளரங்களை விரித்தால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பா.ஜ.க விளம்பரம். மத்திய பா.ஜ.க அரசின் இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட சாதனைகள் அடுக்கப்பட்டன.

பிரதமர் மோடியின் பரப்புரைக் களங்கள் பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விட காங்கிரஸ் கட்சியின் மீதான விமர்சனங்களாலேயே நிரப்பி வளிந்தன. ராகுல் காந்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சிக்கலைத் திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தார் மோடி.

தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 15ஆம் நாள் வெளிவந்தன. பா.ஜ.க பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் இறுதிப் பெரும்பான்மையைப் அவர்களால் பெற முடியவில்லை. தொங்கு சட்டசபை என்கிற கருத்துக் கணிப்புகளை உண்மையாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.

காங்கிரஸ் இல்லா இந்தியா என்கிற முழக்கத்துடன் கடைசிக்கட்டச் சூறாவளியாக களம் இறங்கிய மோடி ஆறு நாள்களில் 25 கூட்டங்களில் ‘வளர்ச்சி’ என்னும் குஜராத் ஆயுதத்தை எடுத்து வீசினார். 2019 இல் தனக்கு எதிரியாகஇசவாலாகப் போகும் ராகுல் காந்தியை முதிர்ச்சி அற்றவர், பேசத் தெரியாதவர், திமிர் பிடித்தவர், பேராசைக்காரர் எனப் போட்டுத் தாக்கினார்.

சோனியா காந்தி இத்தாலிக்காரர்இ சித்தராமையா கமிஷன்காரர் என்றெல்லாம் தனிநபர் தாக்குதலில் சாதாரண மேடைப் பேச்சாளரையும் மிஞ்சினார் மோடி. இத்தனை பகிரதப் பிரயத்தனம் எடுத்தும் பா.ஜ.க வால் இறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பது மோடி அலைக்கு விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

இளைஞர்களின் வேலை வாய்ப்பு, கன்னடர்களின் வரலாற்றுப் பெருமை, மதச்சார்பின்மை ஆகியவையே இந்தத் தேர்தலில் முதன்மையாகப் பேசப்பட்டாலும் பணம், சாதி, வேட்பாளர் ஆகிய மூன்று காரணிகளே வெற்றியைத் தீர்மானித்தன.

இந்தியாவில் கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல்களில் பஞ்சாப்பைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆட்சி அமைத்துவிட்டது.

இந்நிலையில் கர்நாடகாவிலும் ஆட்சியை இழந்துவிட்டது காங்கிரஸ் எனவே பேசப்பட்டது. ஆரம்பத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 104, காங்கிரஸ் 78, மஜத-பகுஜன் சமாஜ் கூட்டணி 38, ஏனையவை 2 இதுவே முடிவாக அமைந்திருந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான (112) தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சியான மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக உடனடியாக அறிவித்தது.

அனைத்தையும் தாண்டி ஆளுனரால் முதல்வராக்கப்பட்ட எடியூரப்பா மூன்று நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்து விட்டு நீதி மன்றத் தலையீடு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமை போன்றவற்றால் விலகிக் கொண்டு விட்டார்.

கர்நாடகா சட்டப் பேரவையில் பரபரப்பான அந்த மூன்று நாட்களுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணியுடன் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் முகியஸ்தரும் அதன் தலைவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் புதல்வருமான எச். டி. குமாரசாமி வரும் 23ஆம்நாள் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்திய விவகாரம்

முன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்

முன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்

நீட் தேர்வு முறைமையும் வஞ்சிக்கப்படும் தமிழகமும்…

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை…. இந்திய அரசியலின் மற்றொரு நகைமுரண்

பேரத்தில்  பேராசிரியை… பின்னணியில் ஆளுனர்… அச்சத்தில் பெற்றோர்… பெரியார் மண்ணின் அவலம்…

மத்தியில் தொடர்ந்தும் கை ஏந்தப் போகிறாயா தமிழா…?