Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

அரசியலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகப் படைக்கட்டமைப்பு?

வெசாக் பண்டிகை மூலமாக யாழ்ப்பாணத்தை பௌத்தமயப்படுத்தும் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

ஏறக்குறைய இதே காலப் பகுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிலிருந்து திரும்பிய வந்த கையோடு வெளியிட்ட கேள்வி-பதிற் குறிப்பில் இதையொத்த ஒரு விடயத்தை விரிவாகச் சுட்டிக்காட்டிருந்தார். வடக்கில் படைத்தரப்பு மேற்கொண்டு வரும் வணிக நடவடிக்கைகள் பற்றி சட்ட கோட்பாட்டுக் கற்கைகளுக்கான தெற்காசிய மையம் (South Asia Centre for Legal Studies SACLS) என்ற நிறுவனம் சென்ற மாதம் வெளியிட்டிருந்த ஒரு கைநூலின் அடிப்படையில் முதலமைச்சருடைய கேள்வி பதிற்குறிப்பு அமைந்திருந்தது.

கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டுக்கு யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி பதில் வழங்கியிருந்தார். விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதில் அதுவென்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த விசேட ஊடகவியலாளர் மாநாடும் நடக்கவில்லை என்றும் கட்டளைத் தளபதி தனக்கு நெருக்கமான ஒரு ஊடகவியலாளருக்கு வழங்கும் செய்தியே அவ்வாறு ஊடக மாநாட்டில் வழங்கப்பட்ட பதில் என்று கூறி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக யாழ் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி கஜேந்திரகுமாருக்கு வழங்கிய பதிலின் ஒரு பகுதி வருமாறு…..’வெசாக் பண்டிகைக்கு மடைதிறந்த வெள்ளம்போல் மக்கள் கூட்டங் கூட்டமாகக் கலந்து கொள்கிறார்கள். இதற்கு வந்த யாழ்ப்பாண மக்களின் ஐந்திலொரு பங்கினர்கூட யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரசியற்கட்சிகளின் கூட்டங்களுக்கு வருவதில்லை. மக்களின் மனங்களை வெல்லமுடியாத இக்கட்சிகளே இராணுவம் யாழ்ப்பாணத்தைப் பௌத்த மயமாக்கி வருகின்றதாகக் குற்றஞ்சாட்டகின்றன’.

கட்டளைத் தளபதியின் பேச்சுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய ஐங்கரநேசன் எதிர் வினையாற்றியிருந்தார். ‘அரச ஊழியர்கள் வெளிப்படையாக அரசியல் பேசுவது அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தாபன விதிக்கோவைக்கு எதிரானது. அத்தோடு, அரச ஊழியரான இராணுவத்தளபதி அரசியல் பேசுவது இராணுவ ஒழுக்க விதிகளுக்கும் முரணானது. அந்தவகையில் இராணுவத் தளபதியின் தமிழ்க்கட்சிகளின் மீதான விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று ஐங்கரநேசன் விமர்சித்திருந்தார்.

ஐங்கரநேசனின் அறிக்கைக்கு யாழ். படைத் தலைமையகம் எதிர்வினையாற்றியிருந்தது. ‘எந்தவொரு அரசியல் கட்சியையும் விமர்சிக்க வேண்டிய தேவை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சிக்கு கிடையாது என்றும் ஆனால் இராணுவத்துக்கு எதிராக வேண்டும் என்று அவதூறுகள் பரப்பப்படுகின்றபோது அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டியது அவரின் நியாயபூர்வமான உரிமையும், பொறுப்பு வாய்ந்த கடமையும் ஆகும்’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படைத்தரப்பு நாட்டில் அரசியலைப்பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கருத்துத் தெரிவித்திருப்பது இதுதான் முதற்தடவையல்ல. இச்சிறிய தீவின் அரசியலைக் குறித்து கருத்துக் கூறும் ஒரு தகமையை படைத்தரப்பு எப்பொழுதோ பெற்றவிட்டது. இலங்கைத் தீவின் அரசியலைத் தீர்மானிக்கும் மூன்று தரப்புக்களில் ஒன்றாக படைத்தரப்பு எப்பொழுதோ எழுச்சி பெற்றுவிட்டது. ஏனைய இரண்டு தரப்புக்களாவன அரசியற் கட்சிகளும் மகாசங்கமும் ஆகும்.

அதிலும் குறிப்பாக 2009 மே மாதம் பெற்ற படைத்துறை வெற்றிகளின் பின் படைத்தரப்பான இலங்கைத் தீவின் மிகப்பலம் வாய்ந்த ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது. முன்னாள் படைத்தளபதி ஒருவர் அரசியல் வாதியாக மாறி அரசுத்தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு நிலமை வளர்ந்திருக்கிறது. அப்படைத் தளபதியாகிய சரத் பொன்சேகா இப்பொழுது அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருக்கிறார்.

இவ்வாறு இலங்கைத் தீவில் படைத்தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சிபெற்றிருப்பதை சில ஆய்வாளர்கள் பாகிஸ்தானுடனும் இஸ்ரேலுடனும் ஒப்பிட்டு ஆராய்வதுண்டு.

மிகச் சிறிய இலங்கைத் தீவின் மொத்த சனத்தொகைக்கும் அதன் வளங்களுக்கும் உரிய பொருத்தமான விதத்தில் படைத்தரப்பு வளர்ச்சி பெறவில்லை. மாறாக சிறிய இலங்கைத் தீவினால் தாங்கிக்கொள்ள முடியாத பொருந்தா வித பெருவளர்ச்சியை படைத்தரப்பு அடைந்து விட்டது. முதற் பேறானவை அனைத்தும் வளங்கள் அனைத்தும் படைத்தரப்பை நோக்கிக் குவிக்கப்பட்டுள்ளன.

உலகின் வெற்றிபெற்ற படைத்துறைக் கல்லூரிகள் அனைத்திலும் கற்றுத் தேர்ந்த ஒரு படைக்கட்டமைப்பாக அது காணப்படுகின்றது. தனக்கென்று அனைத்துலகத் தரத்திலான படைத்துறைப் புலமைக்கற்கை நெறிகளைக் கற்பிக்கும் படைத்துறைப் பள்ளியையும், ஒரு போதனா வைத்தியசாலையையும் அது கொண்டிருந்தது.

எனினும் பாகிஸ்தானைப் போல அரசியற் தலைவர்களை தீர்மானிக்க வல்ல ஒரு சமாந்திரமான அரசாங்கமாக அது இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இன்று வரையிலும் வெற்றி பெற்ற இராணுவ சதிப்புரட்சிகள் எதையும் முன்னெடுக்காத ஆனால் பலமான ஒரு படைத்துறைக் கட்டமைப்பு அது.

இவ்வாறு அளவுப் பொருந்தா விதத்தில் மிகையாக அது வீங்கிக் காணப்படுவதால் அதைப் பராமரிக்க வேண்டிய ஒரு பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளாகிய பின்னரும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க முடியாதிருப்பது இதனாற்றான்.

ஆனால் படைத்துறைக் கட்டமைப்பை மறுசீரமைக்காமல் நிலைமாறு கால நிதியை ஸ்தாபிக்க முடியாது என்பதை ஐ.நா.வும் சம்பந்தப்பட்ட வல்லுனர்களும் உணர்ந்திருக்கிறார்கள். 2015ம் ஆண்டின் 30/1 ஐ.நா.தீர்மானத்திலும் அதுவே கூறப்பட்டுள்ளது. பேராசிரியர் உயாங்கொட கூறும் கட்டமைப்பு மாற்றங்களில் இதுவும் அடங்கும். ஆனால் படைக்கட்டமைப்பை மறுசீரமைக்கவோ அல்லது அதில் ஆட்குறைப்பைச் செய்யவோ இப்போதுள்ள அரசாங்கமும் தயாரில்லை. பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கவும் அரசாங்கம் தயாரில்லை.

இத்தகையதோர் பின்னணியில் அளவுக்க அதிகமாக வீங்கிக் கொண்டிருக்கும் படைக்கட்டமைப்பை பராமரிப்பதற்கு பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் அப்பால் வேறு நிதிமூலங்கள் மற்றம் வருமான வரிகளைத் தேடவேண்டிய தேவை படைத்தரப்பிற்கு உண்டு. அதற்காகவுந்தான் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டுவது போல வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் முதலீடுகளைச் செய்து வருகிறார்கள்.

வடக்கில் உள்ள மிகப்பெரிய உல்லாசப்பயண விடுதி உரிமையாளர் படைத்தரப்புத்தான். அது போலவே வன்னியில் உள்ள மிகப்பெரிய தொழில் வழங்குனரும் அவர்கள்தான். முன்பு புலிகளின் ஆட்சிக்காலத்தில் அந்த இயக்கம் ஓர் அரசை நிர்வகித்து வந்தது. அந்த அரை அரசு அந்நாட்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வழங்கியது. 2009 மேக்குப் பின் அந்த இயக்கம் இல்லாத வெற்றிடத்தை படைத்தரப்பு நிரப்ப எத்தனிக்கிறது. அந்த இயக்கத்தின் சொத்துக்களைக் கைப்பற்றி இப்பொழுது வன்னியின் ஆகப்பெரிய ஒரு தொழில் வழங்குனராக அது எழுச்சி பெற்றுவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு யாழ்பாணத்தில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றின் அனுசரணையோடு அறிவைப் பகிரும் வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் நடந்த ஒரு கலந்துரையாடலில் பொருளாதார விவகாரங்களைக் குறித்து இடைக்கிடை அறிக்கை விடும் ஒரு ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளரான ஒரு தமிழர் கூறினார்… ‘படைத்தரப்பு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சந்தைப் போட்டிகளிளிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று கேட்பதில்லை’ என்று.

ஆனால் சந்தைக்கு வரும் விலை பொருட்கள் யாவும் தமிழ் மக்களுக்குரிய நிலங்களில் இருந்தும் கடலில் இருந்தும் காடுகளில் இருந்தும் பெறபட்டவை தான். விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல ‘உள்ளூர் வணிகர்களுடன் நியாயமற்ற வணிகப் போட்டியில் படையினர் ஈடுபட்டு வருவது (சட்ட கோட்பாட்டுக் கற்கைகளுக்கான தெற்காசிய மையத்தின் அறிக்கையில்) சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்றைய கம்பெனிகள், தனியார் நிறுவனங்கள் முகம் கொடுக்க வேண்டிய பல வரிகளுக்கும் செலவுகளுக்கும் இராணுவத்தினர் முகம் கொடுக்காததால் வணிகப் போட்டி படையினருக்கு சார்பாகவே நடைபெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

இது வடமாகாணத்தில் நடைபெற வேண்டிய முதலீடுகளையும் வணிகத்தையும் பாதிப்பதாய் அமைந்துள்ளன. படையினர் மக்களின் வாழ்வாதாரங்களைத் தாமே சுவீகரித்துள்ளார்கள். இராணுவத்தினரின் வணிக நடவடிக்கைகள் பொதுவான சட்ட திட்டங்களுக்கு அமைய நடப்பதில்லை.’

வன்னியிலுள்ள சில உட்கிராமங்களில் வீட்டுக்கு வீடு படைக்கட்டமைப்புடன் இணைந்து செயற்படுபவர்கள் உண்டு. ஒன்றில் இராணுவத்தில் வேலை செய்பவர்கள். அல்லது இராணுவத்தின் சிவில் கட்டமைப்பின் பண்ணைகளில் அல்லது முன்பள்ளிகளில் வேலை செய்பவர்கள் என்று பெருந்தொகையானவர்களை அங்கே காணமுடியும். உலகிலேயே படைத்தரப்பினால் முன்பள்ளிகள் நடாத்தப்படும் ஒரு நாடாக சிறீலங்கா காணப்படுகிறது. இம்முன்பள்ளிகளில் படிப்பிற்கும் ஆசிரியர்களுக்கு ஏனைய நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் வழங்கப் படுவதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கபடுகிறது. அதோடு தவணைக் கட்டணத்தின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளும் வழங்கப்படுகிறது.

எனது நண்பரான ஒரு புலமைச் செயற்பாட்டாளர் பின்வருமாறு கூறினார். ‘எமது கட்சிகள் செயற்பாட்டியக்கங்களுக்கு கிராம மட்டத்தில் பலமான வலைப்பின்னல்கள் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் படைக்கட்டமைப்பிற்கு மிகப்பலமான ஒரு கிராம மட்ட வலைக்கட்டமைப்பு உண்டு’ என்று.

இவ்வலைக்கட்டமைப்பு அதிக பட்சம் தொண்டு அடிப்படையிலானது அல்ல. மாறாக தொழில் பூர்வமானது. அது முழுக்க முழுக்க நலன்சார் வலைப்பின்னல் எனவே ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறது.

ஐ.நா கூறுகிறது படைக்கட்டமைப்பை மறுசீரமைக்குமாறு. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டிருக்கிறார்கள் படையை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று. விக்னேஸ்வரன் கூறுகிறார் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பப் போவதாக. ஆனால் படைக்கட்டமைப்போ கிராம மட்டத்தில் ஆழமாக வேரூன்றி வருகிறது.

நிலாந்தன் அரசியல் ஆய்வாளர்

WEEKLY SPECIAL

இப்போது தனியாக….

இப்போது தனியாக….