Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

நீட் தேர்வு முறைமையும் வஞ்சிக்கப்படும் தமிழகமும்...

நீட் எனப்படும் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்பது  கொடுமை, தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அது நிறுத்தப் படவேண்டும் என்றேல்லாம் புலம்பி அதற்கெதிராக பாரிய போராடங்களை கடந்த வருடம் கண்ட தமிழகம், அதே தேர்வு இந்த வருடம் நடத்தப்பட்ட விதம் அதை விடக் கொடுமை எனப் புலம்புகிறது இப்போது.

இந்த வருடம் நீட் தேர்வு எழுதப் போன மாணவர்கள் சோதனை எனும் பெயரால் தீவிரவாதிகளைப் போல ஆய்வு செய்யப்பட்டு அடிமைகளைப் போல் நடத்தப்பட்டிருக்கிறார்கள், பல மாணவிகள்  உளவியல்  தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்தியாவையே தலைக்குனிய வைத்துள்ள இந்தப் புதிய தேர்வு முறைதான் ஈடு இணையற்ற மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தி விடப் போகிறதா…? வருங்கால மருத்துவர்களையே மனநோயாளியாக்கி விடக்கூடிய இந்தக் கல்விக் கொள்கைதான் நோயற்ற பாரதத்தைப் படைத்து விடப் போகிறதா…? எனவெல்லாம் நியாமான கேளிவிகள் எழுப்பப்படுகின்றன.

கடந்த ஆண்டு அனிதா என்ற  மாணவியை இழந்து அவரது தந்தை கதறி அழுத போது, அவருக்கு ஆறுதலாய் தமிழகமே துணை நின்றது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தங்கள் பிள்ளைகளை வட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்ற  தந்தை ஒருவர்  மாரடைப்பால் மரணமடைந்த செய்தி  அவரது குடும்பத்தவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையுமே  நிலைகுலைய வைத்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான இந்தப் பொதுநுழைவுத் தேர்வினால் என்னவெல்லாம் கெடுதிகள் ஏற்படும் எனக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டிருந்தார்கள். கல்வியாளர்கள் அவர்கள் சார்ந்த துறையின் ஒரு முறைமை தவறு என ஆதரங்களுடன்  சொல்ல  அதை கவனத்தில் கூட எடுக்காமல் ஓர் அரசு கல்வித்துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால், அதன் நோக்கம்தான் என்ன…

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் இந்த நீட் தேர்வு மூலமே நிரப்பப்படுகின்றன. புதிதாக மோடி அரசு அறிமுகப் படுத்திய இந்த தேர்வு முறைக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்பினரும் போராடி வருகின்றனர்.

சேவைத்துறையான மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழகத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்து 206 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்திருந்தனர். அந்தத் தேர்வுக்கான மையங்களை தமிழகத்தில் ஏற்படுத்த எந்த முயற்சியும் எந்த தரப்பாலும் எடுக்கப்படாததால்   தமிழகத்தை சேர்ந்த  மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

வெளிமாநிலம், நீண்டதூர பயணம், பொருளாதார நெருக்கடி, பெண் பிள்ளைகளை எப்படி அழைத்துச் செல்வது என்ற அச்சம் ஆகியவற்றால் பரீட்சைக்கு விண்ணப்பித்த தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வெழுதவில்லை என்பதும் கொடுமை.

தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட  சி.பி.எஸ் நிர்வாகம்  உச்சநீதிமன்றம் சென்று அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

நீட் தேர்வு வேண்டுமா…? வேண்டாமா…? என்ற விவாதம் ஒருபுறம் இருக்கத் தேர்வை எழுதுகிற மாணவர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே எழுதுவதற்கு ஏற்பாடு செய்ய முடியாத நிறுவனமாக சி.பி.எஸ், உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது. அல்லது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்கிற உள்நோக்கத்தோடு செயல்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.

இந்தியா முழுவதுமாக தேர்வு எழுத  பதிவு செய்த 13,26,725 பேரில் தமிழகத்தில் பத்தில் ஒரு பங்கு எனும் விகிதத்தில் 1,07,288 பேர் அடங்குவர். விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு  ஏற்ப கடந்த ஆண்டு இருந்த மையங்களைவிட இந்த ஆண்டு  தமிழகத்தில் தேர்வு மையங்களை அதிகமாக்கி இருக்க வேண்டும். அதை நடை முறைப் படுத்தாமல் நாட்டின் கடைக்கோடி மாநிலமான சிக்கிமில் கூட தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்படிருந்தன.

பொதுவாக தேர்வு எழுதும் ஒரு மாணவனுக்கு  தேர்வு பயம் என்பது இருக்கும். ஆனால் இங்கு தேர்வு மையத்திற்கு செல்வதே பெரும் பயமாகிவிட்டது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும், அலைச்சலும் பணச் செலவும் நிம்மதியான மனநிலையில் தேர்வு எழுதும் வாய்ப்பை கெடுத்துவிட்டது பல ஆயிரம் தமிழக மாணவர்களுக்கு .

பரீட்சை எழுத கேரளம் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மன உளைச்சலினாலேயே மாரடைப்பால் அங்கேயேஉயிரிழந்து விட்டார். கடந்த ஆண்டு கூடுதல் மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லையே என்பதால் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப் போகிறதோ இந்த நீட் தேர்வு …?

மத்திய பாஜக அரசும், இந்த பரீட்சையை நடாத்தும் சிபிஎஸ் அமைப்புமே  இதற்க்கு தீர்வு காண வேண்டும். அடிப்படை உரிமையான  கல்வி மத்திய அரசின் பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் அல்லது தமிழகத்துக்கு நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஏழை எளிய மக்களின் உயர்கல்விக்கனவு நிறைவேறும். அதற்கான நடவடிக்கைகளை நோக்கி தமிழக அரசு  செல்ல வேண்டும்.

WEEKLY SPECIAL

இப்போது தனியாக….

இப்போது தனியாக….