Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

கறை படியா கருப்போவியம்...

காவியங்களும் காணாக் காளையவன் எந்தனுயிர்க் காதலன் ஓவியங்களும் கண் மயங்கும் எழில் படைத்த வேந்தன் என்னவன் தோழி! கேளாய் எந்தன் காதல் கதையை சொல்லச் சொல்ல தெவிட்டவில்லையடி எனக்கு அறிவாயா? என்னவன் திருநாமம்

தமிழ்ப் பெண்கள் கொண்டவன் நாமத்தை நாவினால் உச்சரிக்கலாகாது தோழி!
ஆம்! மனதில் ஒருவனை நினைத்து விட்டால் எந்த ஜென்மந்தன்னிலும் வேற்று ஆடவனைச் சிந்தையிலும் தொடார்கள் தமிழர் மரபு தனில் வந்த பெண்கள்… நானும் அந்த மரபு வழி வந்தவள் ஆயிற்றே…

தரணியிலே பிரகாசிக்கும் பரணி தீபம் போன்றவர் அவர் எங்கே நீயே கண்டு கொள் அவர் நாமம் தன்னை செவ்வரி படராத வெள்ளை வெளேரென்ற மல்லிகை மலர்கள் போன்ற நிறம் கொண்ட பெண்கள்..

பால் நிலவு பட்டதால் பால் வடியும் முகம் தந்தத்தினால் செய்த பதுமையின் முகம் எனத் தோன்றும் பெண்கள் என்றெல்லாம் எழிலே உருவான பாவையர் எத்தனையோ அவர் கடைக் கண் பார்வைக்குப் பரிதவித்த பொழுது அவரின் கருணை எனக்கன்றோ கிடைத்தது…

பூரணை நிலவு போல முகம் இல்லை என்னிடம் தேன் பிலிற்றும் மாதுளை மொட்டு போன்ற மூக்கில்லை எனக்கு தேன் வண்டுகள் போல கரு நிறக் கண்களும் இல்லை
கோவைப்பழ இதழ்கள் என்றால் அவ்வாறும் இல்லை மொத்தத்தில் எழிலற்ற சகிக்க முடியா உருவம் எந்தன் உருவம்

ஆயினும் அவரோ மைவிழியிலும் மதி முகத்திலும் என்ன இருக்கிறது உந்தன் தேன் மொழிக்கும் அன்புள்ளத்திற்கும் இணை இந்த வையகந் தன்னில் இல்லை என்கிறார் தோழி…

புரிதலும் உணர்தலும் புரிந்தாலே போதும் கண்ணே என்கிறார் அழகு மட்டும் கொண்டு அன்புள்ளம் இல்லையெனில் அரை நொடியேனும் வாழ்ந்திட முடியாது என் கண்ணின் மணியே என்கிறார்

ஏழு ஜென்மத்திற்கும் நீங்களே என் துணை என்றேன் தோழி!
மீதி ஜென்மத்திற்கும் எந்தன் துணை யாரோ ? என்கிறார்
நான் தவம் செய்து விடவில்லையடி
எந்தன் நாயகனைக் கண்ணுற்ற நொடிப் பொழுது இன்னும் என் மனப் பெட்டகமதில் கறை படியாத ஓவியமாய்…
அவர் கடைக் கண் பார்வை கிட்டியது எந்தன் பாக்கியம்…

அந்திப் பொழுதில் ஓர் தினம் ஆற்றங்கரையோரமாய் சங்கீதம் இசைத்துக் கொண்டிருந்தேன் யாரோ எவரோ எந்தன் அருகே உள்ளது போன்றதோர் உணர்வு
கானக்குயிலே தேனினும் இனிய உந்தன் குரலினிமை கேட்டு எந்தன் உள்ளம் உருகி விட்டது உன் பெயர் சொல்வாயா என்ற கம்பீரக் குரலைக் கேட்டதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

அவர் விழிகளை ஏறெடுத்துப் பார்க்கவும் எனக்குத் துணிவில்லையடி
கதிரவனின் ஒளி பிரகாசிப்பது போல அவர் பார்வையிலும் கோடிப் பிரகாசம் தெரியுமா?

என்னிடம் நாணம் வந்து தொற்றிக் கொண்டது நான் அவ்விடம் விட்டு விரைந்து விலகி நடந்தேன் எந்தன் உடல் தான் அவ்விடம் விட்டுச் சென்றது உயிர் அவரிடத்திலே அன்றே தஞ்சம் புகுந்து விட்டது தோழி!

எந்தன் காதலை அடைய அவர் அல்லாடிக் களைத்தார் தெரியுமா ? விந்தை தானே?
எந்தன் இசையில் மயங்கி என்னைப் பாடக் கூறிக் கேட்டுக் கொண்டேயிருப்பார்

கொடுத்து வைத்தவள் தானே நான் இறைவனிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
அகல்யா என்ற நாமம் கொண்ட நான் பரணி தீபம் தன்னை ஏந்தும் அகல் விளக்காகத் திகழ வேண்டும்…

மாவலி அனலன்

WEEKLY SPECIAL

பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

பிழைகளற்ற பயணம்

அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்

வள்ளலாக மாறிய ஒரு கேணல்