Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

பிளவு பட்ட தமிழரும், தமிழரின் உரிமை போராட்டமும்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். சொன்னதை உண்மை என நிரூபிப்பதில் தொடர்ந்தும் நாம் தமிழர் முன்னணியில் இருக்கின்றோம். சேர சோழ பாண்டியன் காலம் தொடக்கம் வரணி தேர் இழுப்பு சம்பவம் வரை தொடந்தும் முன்னோர் கூற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் சாவகச்சேரி வரணியில் உயர் சாதியினர் தேர் இழுப்பதற்கு போதாமல் இருந்த காரணத்தினால் வாக்கோ JCB மெசின் கொண்டு தேரை இழுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியத்தை பார்க்க முடிந்தது.

ஏன் இந்த பாகுபாடு, பாரபட்சம்? இந்த சாதியம் எங்களை தமிழரை எங்கு  நோக்கி கொண்டு செல்கின்றது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். இது மாத்திரமில்லை இந்த வரணி நிகழ்வின் பின் இப்படியான சாதிய செயற்பாடு பல யாழ் பிரதேசங்களில் தொடர்ந்தும் நடைபெற்றதாக முக நூல் வழியாக அறிய முடிகிறது, கேள்விப்பட்டும் இருகின்றோம்.

1995 அக்டோபர் 30 க்கு பின் மாபெரும் யாழ் இடம் பெயர்வின் பின் தென்மாராட்சியில் ஒரு பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தபட்ட மக்களிடேயே தண்ணீர் அள்ளும் பிரச்சனையில் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களை தண்ணீர் அல்ல விடாமல் இருக்க அருவருக்க தக்க நடவடிக்கை செய்துள்ளனர் இதை அப்போது இருந்த புலிகள் தட்டி கேட்கவில்லை எனவும் தெரிய வருகிறது.

இவ்வாறு பல சம்பவங்கள் சாதிய வேறுபாட்டை பறை சாற்றி சொல்கின்றன. இதே போன்று வரணியிலும் புலிகள் இருந்த காலத்தில் இவ்வாறான சாதி சண்டை திருவிழாக் காலங்களின் நடைபெற்றதாகவும்  அறியக்கிடைகின்றது.

அனாலும் பரவலாக எல்லோரும் சொல்லுவதேன்னவோ இயக்கம் இருந்த காலங்களின் சாதிய வேறுபாடு இருக்கவில்லை, பாலியல் துஷ்பிரயோகம் நடக்கவில்லை மற்றும் பெண்கள் இரவு ஒரு மணிக்கும் பாதுக்காப்பாக தனியே சென்று வந்தனர் என்பவை ஆகும். இப்போது கூட ஒரு பாலியல் வன்புணர்வோ அல்லது துஷ்பிரயோகமோ நடந்து விட்டால் இயக்கம் இல்லாதது தான் காரணம் என பலர் சொல்ல கேட்க முடிகிறது.

இங்கே தான் நாம் எம்மை சுய விமர்சனம் செய்யவேண்டிய அல்லது கேள்வி கேட்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

முதலாவது இயக்கம் இருந்த காலங்களில் நான் மேல் குறிபிட்டவாறு சாதியப்பிரச்சனையை ஏன் அவர்கள் முற்றாக இல்லாதொளிக்கவில்லை? இதன் ஆபத்து பற்றி என் மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை? பிரிவுகள் பேதங்கள் எம்முடைய உரிமை போரட்டத்தை பின்னோக்கி நகர்த்தும் என்ற உண்மையை புரிய வைக்கவில்லை?

ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு என்று மக்களுக்கு போதிக்கவில்லை? என்ற கேள்விகள் எழுகுன்றது. இதன் காரணம் என்ன? மக்கள் பிரிந்து இருப்பது வேற்றுமை காட்டுவது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தார்களா? மக்கள் ஒன்று சேர்ந்தால் , சேர்ந்து முற்போக்காக சிந்தித்தால் தங்களை கேள்வி கேட்டு விடுவார்கள் என்று நினைத்தார்களா? அல்லது பிரித்தாளும் தந்திரத்தை இவர்களும் கை ஆண்டார்களா என்ற கேள்வி எழுகின்றதல்லாவா?

இதே போலவேதான் பெண்கள் சார்ந்த விடயங்களிலும் முரண்பாடுகளை காண முடிகிறது. ஆணுக்கு பெண் சமன் என எல்லா போராட்ட களத்திலும் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து பெண்கள் வெற்றி ஈட்டிகாட்டிய வீரப்பெண்கள் வாழ்ந்த பூமியில் இன்று ஏன் பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக தங்களுடைய சமூகத்திலே நடத்தப்படுகிறாள்? போராட தற்கொலை குண்டுதாரியாக முன்னுக்குவந்து தன நெஞ்சுரத்தை பறை சாற்றிய பெண்கள்  ஏன் அரசியலுக்கு உள்வாங்கப்படுகிறாள் இல்லை?

அது மட்டும்மல்ல யுத்தம் முடிந்த பின் பலபெண்கள் துணைவர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். முக்கியமாக முன்னைநாள் பெண் போராளிகள். பத்துபேரை எடுத்துகொண்டால் குறைந்தது ஒன்பது பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்களாக வாழ்கின்றனர்.

இந்த நிலை ஏன்? ஏன் தன்னுடைய சமூகமே அவளைபற்றி அவளின் நடந்ததை பற்றி அவதூறு பேசுகின்றது? அண்மையில் நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கிய பெண்கள் முகம் கொடுத்த சவால்கள் எண்ணிலடங்காதவை.

முக்கியமாக அவளின் நடத்தை சம்பந்தமான அவதூறுகள். இவ்வவதூறுகளை பரப்பியவர்கள் வேறு யாரும் அல்ல யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த அவளின் சமூகமே. பெண்களை சமமாக நடத்த வேண்டும் பெண்களை முன்னேற்ற வேண்டும், பெண் உரிமை மதிக்கப்படவேண்டும் என்று முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த சமூகத்தின் மத்தியில் ஏன் மாற்றங்கள் அவர்களின் மனதில் விதைக்கபடவில்லை ? ஆயுதங்களுக்கும் தண்டனைகளுக்கும் பயந்து மக்கள் மௌனித்து இயக்கம் சொல்வதெல்லாம் சரி என்று வாழ்ந்தார்களா என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.

இது மட்டுமல்ல பெண்களை பாரபட்சப்படுத்தும் முக்கியமாக பெண்களுக்கு  காணி உரிமையை மறுக்கும் தேச வழமை சட்டத்தை கூட மாற்றி அமைக்க வேண்டும், பெண்களுக்கு காணி உரிமை வழங்கப்படவேண்டும் என்ற தெளிவும் மக்களிடையே இல்லாதிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

இப்போது நடக்கும் இந்த சாதிய வேறுபாட்டையும் பெண்கள் ஒடுக்கப்படுவதையும் பார்க்கும் இடத்து தமிழர் உரிமைக்காக, தமிழர் விடிவுக்காக போராட வந்தோம் என்றவர்கள் ஏன் நம்மிடையே ஒற்றுமையை உருவாக்கவில்லை? சாதிபேதமும் பிரதேச பேதமும் இனபேதமும் பால்பேதமும் ( ஆண் பெண் ) தமிழர்கள் தம் உரிமையை பெற்று கொள்ள தடையாய் இருக்கும் ஆபத்தான காரணிகள்  என்னும் உண்மையை மக்கள் புரியாதிருப்பதன் காரணம் என்ன? இப்பேதங்கள் எம்மிடையே இருக்கும் வரை முற்றாக எங்கள் மனங்களில் இருந்து களைந்தேடுக்கபடும் வரை எங்களுக்கு விடிவு இல்லை என்பதை நாம் எப்போது உணர போகின்றோம்?

பேரினவாதிகள் எம்மை ஆட்சி செய்கின்றார்களோ இல்லையோ எம்முள் இருக்கும்  சாதிபேதமும், பிரதேச பேதமும் இனபேதமும் பால்பேதமும் ( ஆண் பெண் ) எம் மக்கள் மனதில் இருக்கும் வரை நாம் நம் உரிமையை பல்லாயிரம் ஆண்டுகள் அனாலும் பெற்றெடுக்க முடியாது என்பது உறுதி. முற்போக்கான சமூக மாற்றம் எம்முள் என்று உருவாகின்றதோ அன்றே எமக்கு விடிவு .

 “வாக்கு போடும் அரசியல் மாற்றத்தை விட ஒரு கண்ணியமான யோக்கியமான, பாரபட்சம் காட்டாத, பண்படுத்தப்பட்ட சமூக மாற்றமே அந்த சமூகத்தின் விடுதலையை பெற்றுத்தரும்” பெரியார்

WEEKLY SPECIAL

பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

பிழைகளற்ற பயணம்

அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்

வள்ளலாக மாறிய ஒரு கேணல்