Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரன் இறந்தமை உறுதிப்படுத்தப்படவில்லை : விஜயகலா மகேஸ்வரன்

In இலங்கை
Updated: 09:39 GMT, Nov 13, 2017 | Published: 09:39 GMT, Nov 13, 2017 |
0 Comments
2820
This post was written by : Ravivarman

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. மரணச்சான்றிதழை வழங்கினால் மட்டுமே பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடகிழக்கில் தமிழீழம் கோரி, எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து, அந்த போராட்டம் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.

போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளார்.

தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் ஆயுதங்களை தந்தால், பழைய யுத்த நிலைக்கு வரமாட்டோம். எத்தனை பிறவி எடுத்தாலும், அதை மீண்டும் செய்ய முடியாது. அது பொய்யான கூற்று. சிலருக்கு சில ஆசைகள் இருக்கின்றன. அதற்காக சில கட்சிகளை உடைத்து விடுகின்றார்கள்.

அதற்கு இடமளிக்காது இன்று உள்ள தலைவர்கள் இனவாதம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். நாளை அமையப் போகும் தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், இனவாதிகளாகவே இருப்பார்கள். இனவாதிகளுடன் பேச முடியாத காரணத்தினால், இங்குள்ள சிறு சிறு கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடைக்கவும் கூடாது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மதிக்கத்தக்கவராக இருக்கின்றார். ஆகையினால், சம்பந்தனின் ஊடாகவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வர முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன், பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg