Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிணறுகளை தேடியலையும் கேப்பாப்புலவு மக்கள்!

In இலங்கை
Updated: 04:39 GMT, Jan 2, 2018 | Published: 04:39 GMT, Jan 2, 2018 |
0 Comments
1320
This post was written by : Varshini

முல்லைத்தீவின் கேப்பாப்புலவு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், அங்கு கிணறுகளோ மரங்களோ இன்றி வெறும் தரிசு நிலங்களே காணப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்புலவின் 133 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதோடு, குறித்த காணிகளை பார்வையிடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டது.

தென்னை மரங்கள் சூழ, கிணறுகளும் தோட்டங்களும் என செழிப்புடன் விட்டுச் சென்ற தமது காணிகளை 8 வருடங்களின் பின்னர் பார்வையிட்ட மக்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

தமது காணிகளின் எல்லைகளைக்கூட கண்டுபிடிக்கமுடியாமல் குவாரிகளாக காணப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். காணி உரிமையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, தனது காணியில் சுமார் 200 தென்னை மரங்களும் கிணறுகளும் காணப்பட்டதாகவும் தற்போது அவை எல்லாம் அழிக்கப்பட்டு, நிலத்தின் ஒரு பகுதி மண்ணும் அகழப்பட்டு காணப்படுவதாகவும் காணி உரிமையாளர் குறிப்பிட்டார்.

பிறிதொரு காணி உரிமையாளர் கருத்துத் தெரிவித்த போது, தமது காணியில் இருந்த வீடு இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும், தான் அத்திவாரம் இட்டிருந்த இடத்தில் ராணுவம் ஒரு கட்டடத்தை கட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தக் கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளதென குறிப்பிட்ட அவர், தமது காணியில் காணப்பட்ட கிணற்றையும் காணவில்லையெனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கேப்பாப்புலவின் மேலும் 45 குடும்பங்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், குறித்த மக்கள் 307 நாட்களை கடந்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் காரணமாக தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், தமது காணிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg