ரவி உட்பட நால்வரின் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிப்பு
In இலங்கை March 11, 2020 7:54 am GMT 0 Comments 1780 by : Jeyachandran Vithushan
கைதுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுக்களை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், மத்திய வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரின் சட்ட ஆலோசகரான சமன்குமார ஆகியோர் நேற்றையதினம் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை அடுத்து குறித்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணையின்போது சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, மூவரடங்கிய நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளினை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ரீட் மனுக்களை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக அறிவித்தது.
2016 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
எனினும் கடந்த நான்கு நாட்களாக அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவரை கைது செய்யவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.