பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி!
In இங்கிலாந்து October 21, 2018 3:25 am GMT 0 Comments 1671 by : Varshini
பிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
லண்டனிலுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானிய வரலாற்றில் பதியப்படும் அளவிற்கு சுமார் 700,000இற்கும் அதிகமான மக்கள் அலையென திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
லண்டன் மேயர் சாதிக்கான் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதையடுத்து, முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
பொதுவாக்கெடுப்பு ஜனநாயகமற்றதென அரசாங்கம் நினைக்கின்றதென குறிப்பிட்ட லண்டன் மேயர் சாதிக்கான், பொது வாக்கெடுப்பே ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமென குறிப்பிட்டார். பிரித்தானிய மக்களின் கருத்துக்கணிப்பை விட ஒரு உண்மையான ஜனநாயகமும் உண்மையும் இருக்கமுடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரெக்சிற்றிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றும் நேற்று இடம்பெற்றது. யூகிப் கட்சியின் முன்னாள் தலைவர் நைஜல் பராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதை விரும்பியே ஏற்கனவே மக்கள் வாக்களித்தனர் என்றும் அது இடம்பெறுவதை மக்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக தீர்மானித்துள்ளது. பிரெக்சிற் தொடர்பான தெளிவுபடுத்தல் குறைவாக இருந்த சந்தர்ப்பத்திலேயே அதற்கு ஆதரவாக வாக்களித்ததாக தற்போது பெருமளவான மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்கெடுப்பை கோரி அண்மைய காலமாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.