மரண தண்டனை போதைவஸ்து பாவனையை ஒழிக்காது

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பின்ஸ் நாட்டுக்கு சென்று வந்த பின் அங்கு நடைமுறையில் இருக்கும் போதைவஸ்து கடத்தலுக்கு விற்பனைக்கு மரண தண்டனை கொடுக்கப்படுவது போல் இலங்கையிலும் பிரகடனப்படுத்தப்படும் என்று கூறி இருந்தார். இன்று 400 கிலோ கஞ்சாவுடன் ஒரு பெண் ஒருவர் ஓட்டி வந்த வாகனத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த செய்தி பலராலும் பலவிதமாக பேசப்படுகிறது.
பலரும் தொடர்ந்து மரணதண்டனை கொடுப்பது சரியானதே என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக இருப்பதை காணமுடிகிறது. முதியோர் முதல் இளைஞர்கள் வரை இதை வரவேற்கின்றனர். இப்போது பெண்ணின் வாகனத்தில் இருந்தது பலருக்கு அதிர்ச்சியை தருவதோடு ஆண்கள் மட்டும் தான் கடத்த முடியும் இப்போ நீங்களும் சம உரிமை கேட்டு கஞ்சா கடத்தவும் வந்து விட்டீர்கள் என்பது போன்ற கேளிப்பேச்சுக்களையும் காண முடிகிறது.
இவ்வேளையில் சில விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும். மரணதண்டனை என்பது ஒருவர் திருந்துவதற்கு இடமளிக்க முடியாத தீர்ப்பு. மனிதன் மாறுவான், நல்லவன் கெட்டவனாவன், கெட்டவன் நல்லவனாகிய பல சம்பவங்கள் நாம் அறிந்ததே. திருந்தி வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம், இரண்டாவது மரணதண்டனை பிழையாக இருப்பின் உயிரை திரும்பி பெற முடியாது. தீர்ப்புகள் எவ்வளவோ பிழையாகிப்போன வரலாறுகளும் உண்மை சம்பவங்களும் உண்டு.
இந்த போதைவஸ்து நாட்டினுள் கொண்டு வரப்பட்ட பின் பலரின் கைமாற்றலின் ஊடாகத்தான் இது பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்பவர்களில் பலர் கொடுக்கபட்ட பார்சலில் என்ன இருக்கிறது என்பதை அறியாதவர்கள். நம்பிக்கையானவர்கள் உதவி கேட்கும் போது மறுக்கும் பண்பு எமக்கில்லை. அப்படியாயின் இவ்வாறு பரிமாற்றம் செய்யுமிடத்து தவறாக அப்பாவி கொல்லப்பட பல சாத்தியங்கள் உண்டு. இதற்கு இந்த பெண் உதாரணம். முதலில் சரியான விசாரணை நடக்குமா? குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறமை உள்ளதா அது அந்த பெண்ணாக கூட இருக்கலாம்.
மற்றும் சிறு சிறு பொதிகளாக பரிமாற்றம் செய்பவர்கள் வறுமையில் வாழும் மக்கள். இவர்களிலும் சட்டம் பாயுமே. வடக்கில் இவ்வளவு பணம் தருகிறேன் இதை இன்னாரிடம் கொண்டு சேர் என்று சொல்லும்போது அதை பல பெண்களும் செய்கின்றனர், இவர்கள் போரினால் பாதிக்கபட்ட பெண்கள் கூடவே இவர்களுக்குள் பொதியினுள் என்ன இருகின்றேதேன்று தெரியாமலும் செய்கின்றனர். இந்த 400 கிலோ கூட அப்படி கொடுக்கபட்டதாக கூட இருக்கலாம் அல்லவா ?
ஒரு உயிரை எடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை, அது அரசாக இருந்தாலும். போதைவஸ்து கடத்தும் நிலைக்கு தன் குடிமக்களை தள்ளிய அரசுதான் வெட்கப்படவேண்டும்.
உண்மையில் போதைவஸ்து கடத்தலை எவ்வாறு தடுக்கலாம் என்று அரசு சிந்திக்க வேண்டும் அதை விடுத்து மரண தண்டனை தீர்வாகாது. எவ்வாறு நாட்டினுள் வருகின்றது? கடலால் வருகின்றது, விமானத்தால் வருகிறது, கப்பலால் நாட்டினுள் கொண்டு வரப்படுகிறது. ஆகவே சுங்கத்திணைக்களம், காவல்துறை, கடற்படை போன்ற போன்றவை ஒழுங்காக கடமைப்பாட்டுடன் செயல்பட்டால் மரணதண்டனை எதற்கு?இத்திணைக்களுக்கு சரியான வசதி வாய்ப்புக்கள் பயிற்சிகள் உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்படவேண்டும். மற்றும் யாருடைய தலையீடு இன்றி சுயாதீனமாக தங்கள் சேவைகளை செய்ய இடம் கொடுக்க வேண்டும். இது நடக்குமா? என்ன உத்தரவாதம்?
அடுத்தது எம்முடைய காவல்துறைக்கு தேவையான அனுபவம் திறமை இருக்கிறதா சரியான முறையில் விசாரித்து குற்றவாளியை கூண்டில் நிறுத்த? அதற்குரிய வளம் இருக்கிறதா சுயாதீனம் இருக்கிறதா? விசாரணை செய்யும் பக்குவம் இருக்கிறதா? அப்படியாயின் ஏன் இன்னும் நடு ரோடில் பட்டபகலில் செய்யப்பட்ட கொலைகளை இன்னும் கண்டறிய முடியவில்லை ? குற்றவாளி ஏன் தப்பிக்கிறான்?
அடுத்தது விரைவாக துரிதமாக விசாரணை செய்து குற்றவாளியை கூண்டில் நிறுத்தும் நீதித்துறை உள்ளதா? போதுமான நீதிமன்றங்கள் உள்ளனவா? இவை இல்லாமல் எவ்வாறு யாரை தண்டிப்பது ? தவறானவன் தண்டிக்கப்பட குற்றமிழைத்தவன் தப்பித்துகொள்ளும் நாடு இது.
இது போலவே சம்பந்தபட்ட அனைத்து நிறுவனங்களும் உள்ளன. சரியான திறமையான ஆளணி இல்லை, துரிதமாக வேலை செய்யும் மனப்பாங்கோ அல்லது தொழில்நுட்பமோ இல்லை. இவ்வாறான குறைபாடுகளையும் கட்டமைப்பையும் வைத்துகொண்டு யாருக்கப்பா மரணதண்டனை ?இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து பார்க்காமல் மரண தண்டனைக்கு சார்பாக பேசுதல் வருத்தம் தரும் விடயம்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பாரபட்சம் இல்லாமல் நடைபெற வேண்டும் முதலில். இருக்கும் சட்டங்களை முதலில் சரியாக விரைவாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதை விடுத்து சட்டங்களை மட்டும் கொண்டு வருவது தீர்வை பெற்று தராது. மற்றும் என்னதான் சட்டங்களை கொண்டு வந்தாலும் அரசியல் தலையீடுகள் முற்றாக ஒழிக்கப்படாதவிடத்து எதுவும் சாத்தியமில்லை.
அரசியல்வாதிகள் நாட்டின் சட்டம் ஒழுங்கில் தலையிடாதவாறு ஜனாதிபதி உறுதி அளிக்கவேண்டும். குற்றவாளி எப்பேர்பட்ட அமைச்சராக இருந்தாலும் சட்டம் தன்கடமையை செய்யவேண்டும். நடக்குமா இலங்கையில். பிடிபடப்போகின்றோம் என்று தெரிந்தாலே நாட்டைவிட்டு ஓடி விடுவார்கள் அல்லது அதற்கு முன்னே பிணை எடுத்துவிடுவார்கள்.
மற்றும் ரகசியம் பேணல் என்பது எம் நாட்டில் கேள்விக்குறி அல்லவா?. எல்லாமே கசிந்து விடுகிறது. பணத்துக்கும் பதவிக்கும் எல்லோரும் விலைபோகும் நாடலல்லவா?
எல்லாவற்றையும் விடுவோம் உலகத்தையே உலுக்கிய புலிகளை இல்லதொளித்த அரசுக்கு போதைவஸ்து கடத்தலை நிறுத்துவது கடினமா? விநோதமாக இல்லை? மக்களாகிய நாமும் பொறுப்பு கூற வேண்டும் அல்லவா? எம் பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்து குட்டி சுவராக்கும் இந்த செயல்பாட்டை இல்லாதொழிக்க நாம் எல்லாரும் ஒன்று சேரவேண்டும். நாட்டையும் எம் எதிர்காலத்தும் காப்பாற்றுவோம் என உறுதிபூணுவோமாக.
-
அதிகாரம் பகிரப்பட்டால் நாம் அதை பகிர்வோமா ?
“புதிய அரசியல் யாப்பு திருத்த வரைபை நான் படிக்கவும...
-
தற்கொலைக்கான காரணிகள் எவை ?
அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கில் தற்கொலை செய்து கொ...