வருட இறுதிக்குள் ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் – ஜனாதிபதி அதிரடி
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 9:05 am GMT 0 Comments 3525 by : Jeyachandran Vithushan
இந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாங்கள் நம்புவதாகவும் ஜனாதிபதி சர்வதேச ஊடகமான ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாதிகளின் இந்த செயற்பாடுகளினால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது. எனவே தேர்தலுக்கு முன்னதாக பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டில் ஸ்திரத்தன்மையினை கொண்டுவருவேன்.
ஏற்கனவே தற்கொலைக் குண்டுதாரிகளின் குழுவுடன் தொடர்புடைய 25 முதல் 30 வரையான நபர்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவர்கள் தற்கொலைதாரிகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இருப்பதனால் இந்தத் தாக்குதல்களானது, இலங்கை பிரச்சினை அல்ல, இது சர்வதேச பயங்கரவாத செயற்பாடாகும்.
குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
இதேவேளை இந்த விடயத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை மற்றும் இன்டர்போல் உட்பட 8 நாடுகளில் இருந்து புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு உதவுகின்றனர்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாதி மில்லத் இப்ராஹீம் ஆகிய இரு சிறிய குழுக்களே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியது என பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு இதற்கு முக்கிய சூத்திரதாரியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமே உள்ளார் என்றும் பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.