முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை

உலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது.
இதனை வெள்ளை மாளிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-சிசி கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை தீவிரவாத அமைப்பாக பெயரிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய ட்ரம்ப் நிர்வாகத்தின் இது தொடர்பான செயற்பாட்டை வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாராஹ் சண்டர்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை எகிப்து ஏற்கனவே தீவிரவாதிகள் என விபரித்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவும் அதனை தீவிரவாத அமைப்பாக பெயரிட்டால் அதனுடன் தொடர்பை பேணிவரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடைகள் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல அரபு நாடுகளில் பெரும் எதிர்கட்சியாக விளங்குகின்ற இந்த முஸ்லிம் சகோதரத்துவ சமூகம், எகிப்தில் 1928ஆம் ஆண்டில் இஸ்லாமிய அறிஞரும் பள்ளியாசிரியருமான ஹசன் அல்-பன்னா என்பவரால் நிறுவப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.