அச்சத்திலுள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகளே கோட்டாவுக்கு எதிராக சூழ்ச்சி!

அச்சத்திலுள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே கோட்டாபய ராஜபக்ஷ மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கு என பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தமை, பாதாள உலகக்குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சில தென்னிலங்கை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கின்றார்கள். எனவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையேற்படுத்தும் நோக்கில் சில தென்னிலங்கை அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் தூண்டுதலின் பேரிலேயே அமெரிக்க நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றே நாங்கள் கருதுகின்றோம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
கோட்டாபய ராஜபக்ஷ அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையானது, அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் என்பதற்கு இன்னமும் அதிக வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
எனவே இவற்றின் பின்னணியில் சில தென்னிலங்கை அரசியல்வாதிகளும், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தொடர்புபட்டிருக்கின்றனர்.
யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தமை, பாதாள உலகக்குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.
அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.