தமிழர் பிரதேசங்களில் விஹாரைகளை அமைப்பதும், காணிகளை கபளீகரம் செய்வதும் தொடர்கதையாகியுள்ளன. அதுமட்டுமன்றி, அதிகாரப் போக்குடன் செயற்படுவதும் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் இடையூறை ஏற்படுத்துகின்றது.
அந்தவகையில், யாழ். நாக விஹாரை விடுதியின் மலக்கழிவுகள் வெள்ள வாய்க்காலில் சேர்க்கப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.
யாழ். மாநகரத்தின் மையப்பகுதியில் ஆரியகுளம் சந்தியிலே காணப்படும் நாக விஹாரைக்கு முன்பாகவுள்ள யாத்திரீகர் மடத்தின் மலக்கழிவுகள் மற்றும் விடுதிக்கழிவுகள் என்பன பிரதான வெள்ள வாய்க்காலில் சேர்க்கப்படுகின்றன.
இதனால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால், நடவடிக்கை எடுக்குமாறு பலதடவை வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், யாழ். மாநாகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் இதனை சுத்தப்படுத்த பணிப்புரை விடுத்துள்ளார்.
எனினும், துப்பரவுநடவடிக்கையின் போதும் மடத்தின் கழிவுகள் கண்முன்னே வாய்க்காலில் கலக்கப்படுவதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபன் சுட்டிக்காட்டுகின்றார்.
குறித்த வாய்க்காலுக்கு அருகில் குளங்கள், வைத்தியசாலை மற்றும் கல்வி நிலையங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், நாக விஹாரை மடத்தின் இச்செயற்பாடு மக்களை பெரும் அசௌரியத்திற்கு இட்டுச்சென்றுள்ளது.
யாத்திரீகர் மடத்தின் பொறுப்பதிகாரிகளுக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்ட போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க மக்களும் அஞ்சுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஒரு வர்க்கத்தினர் தன்னிச்சையாகவும் அதிகாரப் போக்குடனும் செயற்படும் சந்தர்ப்பத்தில், அங்கே பூர்வீகமாக வாழும் மக்கள் தமது செயற்பாடுகளை செவ்வனே செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உரிமைகள் பறிபோகும் தாயக மண்ணில் மேலும் அதனை அனுமதிக்கப் போகின்றோமா?