அநீதிகளுக்கு எதிராகவே பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் பங்கேற்றேன்: ரவிகரன் வாக்குமூலம்
In இலங்கை February 15, 2021 8:44 am GMT 0 Comments 1406 by : Dhackshala

எமது மக்களுக்காகவும் எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் ரவிகரனிடம் இன்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றிருந்தனர்.
பொலிஸ் நிலையத்தில் தனது வாக்குமூலத்தினைப் பதிவுசெய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எழுச்சிப் போராட்டத்தில் நான் முல்லைத்தீவிலே கலந்துகொண்டமை தொடர்பிலே வாக்குமூலம் ஒன்றினைப் பெறுவதற்காக இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
அவ்வாறு அழைக்கப்பட்டதற்கமைய என்னிடம் அங்கே வாக்குமூலம் பெறப்பட்டது. அந்தவகையில் இந்த போராட்டமானது பொதுமக்கள் சார்ந்து பலர் கலந்துகொண்டு நடாத்தப்பட்ட ஒரு போராட்டமாகும்.
இந்தப் போராட்டத்திலே நான் கலந்துகொண்டதாகவும் பொலிஸார் எனக்கு நீதிமன்றத் தடைக் கட்டளையினைத் தந்ததாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் நீதிமன்றக் கட்டளையிலே எனது பெயர் உள்ளடக்கப்படவில்லை என்றும் பொதுவாகவே அக்கட்டளை இருந்ததெனவும் அதனாலேயே குறித்த நீதிமன்றக் கட்டளையினை பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்தேன்.
அத்தோடு அன்றைய சூழலில் எமது மக்களுக்காகவும் எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாவண்ணம் போராட்டத்தில் ஈடுபடிருந்ததை வாக்குமூலத்தில் தெரிவித்தேன்.
அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டுவந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், நானும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அப்போராட்டத்தில் கலந்துகொண்டேன் என்பதையும் எனது வாக்குமூலத்தில் பதிவுசெய்துள்ளேன்.
மேலும் நான் பொலிஸ் நிலையத்திற்கு சென்றவுடன் வாக்குமூலத்தினைப் பெற்று உடனடியாகவே என்னை அனுப்பிவைத்துவிட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.