அனில் அம்பானியின் வரி நிலுவையை தள்ளுபடி செய்தது ஏன்? – பிரான்ஸ் விளக்கம்

பிரான்ஸ் நாட்டில் தொழில் நடத்தி வரும் அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி நிலுவையை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்தது ஏன் என பிரான்ஸ் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைமை தூதரகம் இன்றிரவு (சனிக்கிழமை) இதற்கு விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸ் தலைமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிளொக் நிறுவனத்துக்கும் பிரான்ஸ் நாட்டு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சமரச திட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரான்ஸ் அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த சமரசம் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் எந்த விதமான அரசியல் தலையீடுகளும் கிடையாது“ என குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி நிலுவையை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துவிட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற பின்னர் இந்த வரி தள்ளுபடி நடந்ததாக அந்த பத்திரிகைச் செய்தி சுட்டிக்காட்டியிருந்தது.
இதனிடையே, இந்திய பிரதமர் மோடியின் தலையீட்டினாலேயே இவ்வளவு பெரிய தொகையை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்ததாக இவ்விவகாரம் இன்றைய அரசியல் சூழலில் இந்தியாவில் காரசாரமான விவாதத்துக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.