அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் – அகில இலங்கை ஜமியத்துல் உலமா
நாட்டிலுள்ள அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நீர்கொழும்பில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரமழான் ஆரம்பமாகும் இந்த கட்டத்தில் நிதானமாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளிடமும் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று காலை நீர்கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் இஸ்லாமிய மதத்தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் நிறைவிலேயே அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.