யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீதிப்பிரச்சினை சகல பகுதிகளிலும் காணப்படுகிறது.
எனினும், புனரமைப்பு என்ற பெயரில் இருக்கின்ற வீதியையும் சிதைத்து, மக்கள் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு வீதியைப் பற்றி இன்றைய ஆதவனின் அவதானம் (05.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மந்தைநகர் பிரதான வீதி பல வருட காலமாக சீர்செய்யப்படாமல் காணப்படுகின்றது.
பிரதேச சபையின் சென்றவருட நிதியொதுக்கீட்டில், இந்த வீதியை சீர்செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்பிரகாரம் ஒப்பந்தக்காரர்களால் வீதியின் ஆங்காங்கே அகழப்பட்டு புனரமைப்பிற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இடம்பெற்றன.
எனினும், அகழப்பட்ட இடங்களை அவ்வாறே போட்டுவிட்டு, புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
முன்னர் இருந்ததைவிட தமக்கு நல்லதொரு வீதி கிடைக்கப் போகின்றது என்று ஆர்வத்துடன் மக்கள் அந்த நிலைமைகளை பொறுத்துக்கொண்டிருந்தனர். இருந்தபோதும் குறித்த வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது திரும்பிச் சென்றுவிட்டதாக பிரதேச சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாம் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச சபையே இதற்கு பொறுப்பு என மல்லாவி வடக்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் குணசீலன் எம்மிடம் குறிப்பிட்டார்.
இப்பிரச்சினை தொடர்பாக துணுக்காய் பிரதேச சபை தலைவர் எஸ்.அமிர்தலிங்கத்தை எமது ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.
மழை காரணமாகவே இந்த நிதி திரும்பிச்சென்றதாக பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டார். ஆனால், இதற்கும் பிரதேச சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் பிரதேச செயலாளரே பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வீதிகள் புனரமைக்கப்படுவதும் அவை தொடர்பான நிதியை கையாளுகின்ற அதிகாரங்களும் பிரதேச சபையின் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டவை என உள்ளூராட்சி சபைகள் தொடர்பான சட்டங்கள் எடுத்தியம்புகின்றன.
இந்நிலையில், கௌரவ பிரதேச சபை செயலாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்பது சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆக ஒரு பிரதேசத்தினுடைய காலச்சூழல் மற்றும் அதற்கு கிடைக்கின்ற நிதிகளை கையாள்வது தொடர்பில் சரியான திட்டமிடல் இன்மை போன்றவற்றை பிரதேச சபையின் செயற்திறன் இன்மையாகவே கருதவேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இவ்வாறு பல வினைத்திறனற்ற அதிகார கட்டமைப்புகள் இருப்பது தமது தலையெழுத்தென அப்பிரதே மக்கள் ஆதவனிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.