அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் கோடி டொலர்கள் செலவிடுவதற்கான திட்டம்: பைடன் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இந்த நிதியில் 1 இலட்சம் கோடி டொலர்கள் நேரடியாக அமெரிக்கக் குடும்பங்களுக்கு உதவி நிதியாக அளிக்கப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டொலர்கள் நிதி உதவி பெறுவார்கள்.
அவர் அறிவித்துள்ள ஒவ்வொரு அமெரிக்கருக்குமான, 1,400 டொலர் நிதியுதவி கடந்த மாதம் ட்ரம்ப் அறிவித்த 600 டொலர் உதவித்திட்டத்தை உள்ளடக்கியது அல்ல. இரண்டுமே கிடைக்கும் என்பதுதான் பைடன் திட்டம்.
இந்த நிதியில், குடும்ப உதவி தவிர, 41,500 கோடி டொலர் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை செயற்படுத்தவும், 44,000 கோடி டொலர் சிறுவணிகங்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், தொற்றுத் தாக்கத்தில் 1 கோடியே 10 இலட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.