அமெரிக்காவில் முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி ஃபைசர் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவில் முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். ஏற்கனவே ஒவ்வொரு மாகாணத்துக்கும் நாங்கள் தடுப்பூசியை அனுப்பும் பணியை தொடங்கி விட்டோம். யாருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாகாண ஆளுனர்கள் முடிவு செய்வார்கள்.
மூத்த குடிமக்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது விரைவாகவும், வியக்கத்தக்க முறையில் இறப்புகளையும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் குறைக்கும்’ என கூறினார்.
ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிக்கு முதன் முதலில் பிரித்தானியா அனுமதி அளித்தது. அதன்பின் பஹ்ரைன், கனடா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.