அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெனரல் மைக்கேல் பிளினுக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பது எனது பெரிய மரியாதை. ஜெனரல் பிளின் மற்றும் அவரது அருமையான குடும்பத்துக்கு எனது வாழ்த்துகள். உங்களுக்கு இப்போது உண்மையிலேயே ஒரு அற்புதமான அறுவடைத்திருநாள் அமையும் என்பது எனக்கு தெரியும்’ என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தாகவும், ட்ரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்ய அரசாங்கம் வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜனாதிபதி ட்ரம்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட மைக்கேல் பிளினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் செர்கெய் கிஸ்ல்யாக்கை தொடர்பு கொண்டு, ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்துக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ரஷ்ய தலையீடு விவகாரம் குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு பொலிஸாரிடம் மைக்கேல் பிளின் தவறான தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தால் பதவிக்கு வந்த 3 வாரங்களில் மைக்கேல் பிளின் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனிடையே இது தொடர்பான விசாரணையின் முடிவில் கடந்த 2017ஆம் ஆண்டு மைக்கேல் பிளின் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அமெரிக்க நீதித்துறை அவரை குற்றவாளியாக அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மைக்கேல் பிளினுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.