அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி!

அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஐக்கிய அமீரக அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களையும் என்டி பால்பிரையன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஐக்கிய அமீரக அணியின் பந்துவீச்சில், முஸ்தபா 2 விக்கெட்டுகளையும் காசீப் டவுட், அஹமட் ராஸா, பழனியப்பன் மெய்யப்பன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 270 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஐக்கிய அமீரக அணி, 49 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுந்தங்கபாயில் ரிஸ்வான் 109 ஓட்டங்களையும் முஹமத் உஸ்மான ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், பெர்ரி மெக்கார்தி மற்றும் கர்டிஸ் கெம்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 136 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுந்தங்கபாயில் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.