அயோத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மசூதியின் அடிக்கல் நாட்டும் பணிகள் குறித்த விபரம் வெளியீடு!
In இந்தியா December 17, 2020 8:29 am GMT 0 Comments 1373 by : Krushnamoorthy Dushanthini

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மசூதிக்கு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாதிரிவரைப்படம் வரும் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக பாபர் மசூதி நிர்மாணப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மசூதி வட்ட வடிவில் சுமார் 2000 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இதன்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் மசூதியை இடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.கவின் வழிகாட்டுதல் குழுவின் முக்கிய தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.