அரசாங்கத்தை அச்சுறுத்தவே ஜெனீவா நகர்வு: வடக்கு கிழக்குப் பேரணியும் ஒரு சூழ்ச்சியே- உதய கம்மன்பில

போர்க் குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கிலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஆனால், இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை எனவும் தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பேரணியும் அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளுக்கு மத்தியில், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பேரணி குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் ஆட்சியை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டதாகவே மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட மனித உரிமைப் பேரவை உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கத்தின் ஒருசில துறைகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையே இவர்களின் பிரச்சினையாக உள்ளது.
ஆனால், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது, தகுதியான இராணுவத்தை உரிய துறைகளில் ஈடுபடுத்திப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது எவ்விதத்திலும் தவறான நகர்வு அல்ல.
அதேபோல், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா போர்க் குற்றவாளி என எங்கேயும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட பலர் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தி அவர்களின் கையாளாகச் செயற்படுவதை இந்த நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
எவ்வாறு இருப்பினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எழுத்துமூலம் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளோம். எந்தவொரு இடத்திலும் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஆதரிப்பதாகக் கூறுவதற்கு நாம் தயாராக இல்லை.
இதேவேளை, வடக்கு கிழக்கில் தற்போது இடம்பெற்று முடிந்துள்ள பேரணிகூட மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். புலம்பெயர் புலி அமைப்புக்களின் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்களை சுமந்திரன் போன்றவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஏமாற்று நாடகங்கள்கூட சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் சூழ்ச்சி என்பது தெளிவாக விளங்குகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.