அரசாங்கம் கவர்ச்சியான திட்டத்தால் மக்களை ஏமாற்றுகின்றது – நாமல் குற்றச்சாட்டு
In இலங்கை April 3, 2019 6:44 am GMT 0 Comments 3085 by : Jeyachandran Vithushan
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளில் முன்வைத்த கவர்ச்சியான 5 வரவு செலவு திட்டத்தில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவு திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளில் 5 வரவு செலவு திட்டங்களை முன்வைத்து பல கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கியது.
இருப்பினும் இவ்வாறு கவர்ச்சிகரமான முன்மொழிவுகளை சமர்ப்பித்த அரசாங்கம் அவற்றினை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவது வருத்தமளிக்கின்றது.
மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் ஆசிரியர் துறையில் பல பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. அந்த மக்கள் மீது அக்கறை இருப்பதாக கூறிவரும் அரசாங்கம், அவர்களில் கரிசனை இருப்பதுபோல் போலியாக செயற்பட்டு வருகின்றது
மேலும் அவர்களது கல்வி தொடர்பாக அந்த பகுதியில் இருக்கும் அமைச்சர்களே கவனம் செலுத்துவதில்லை. ஏன் என்றால் அவர்களைவிட கல்வியில் அதிகம் படித்துவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்.
இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தால் கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களை, உரிய திட்டத்துடன் அடுத்த அரசாங்கத்தில் நாம் நடைமுறைப்படுத்துவோம்.
அத்தோடு குளியாபிட்டியவில் இடம்பெறும் மணல் கடத்தல் சம்பவங்களை முறியடித்து சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூழல் மாசடைவை தடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.