அரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டிற்குள் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றது – ஹக்கீம்

அரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டிற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பிரதமரினால் வெளியிடப்பட்ட கருத்து எப்போது வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சுகாதார அமைச்சு என்ற விதத்தில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சபையின் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
நாட்டில் பிரதமர் தீர்மானமொன்றை எட்டி, சபையில் அறிவித்ததன் பின்னர், அதனை மாற்றியமைப்பது சரியானதாக இருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
சுகாதார அமைச்சில் யார் இதனை முடக்குவது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அத்துடன், அரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டிற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனவும், இது தற்போது ஜெனீவா வரை சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.