அரசியல் திரிசங்கு நிலைக்கு தீர்வு காணவேண்டுமெனில்…
In சிறப்புக் கட்டுரைகள் April 27, 2018 3:19 am GMT 0 Comments 2134 by : Arun Arokianathan
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை தவறான கண் கொண்டு நோக்கியதன் விளைவாகவே தற்போதைய அரசியல் திரிசங்கு நிலைமை நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.
வன்முறையற்ற தேர்தல் முறைமை மூலம் ஒவ்வொரு வட்டாரமும் மக்ககள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்று தசாப்தங்கள் நடைமுறையில் இருந்த விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தல் முடிவுகளை தவறாக நோக்கிய மஹிந்த அணியினர் புதிய தெம்பைப் பெற்றுக் கொண்டவர்கள் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.அந்த பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது.
இப்பிரேரணைக்கு ஆதரவாக நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக விளங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் வாக்களித்தனர். இவர்களும் கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவை தவறாக நோக்கியவர்கள் என்பதே அவர்களது இத்தீர்மானம் எடுத்துக் காட்டுகின்றது.
இருந்தும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்த நிலையிலேயே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகளும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதராக 76 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதன்படி 44 மேலதிகளாக வாக்குகளைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களித்து விட்டு அவர் தலைமையிலான அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது நாகரிகமான விடயமல்ல. அதனைக் கருத்தில் கொண்ட ஸ்ரீ.ல.சு.கவைச் சேர்ந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேற ஜனாதிபதியிடம் அனுமதி கோரினர். அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார். அதன் பின்னர் தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்குமாறு கோரினர். அதற்கும் ஸ்ரீ.ல.சு.க. தலைமை அனுமதி வழங்கி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் புத்தாண்டுக்குப் பின்னர் ஐனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைப் பகிஷ்கரித்த ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் பலர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏனைய பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுடனும் சிநேகபூர்வமாக அளவளாவினர்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கெவன அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் குழுவொன்றை நியமித்து விட்டு ஜனாதிபதி பிரித்தானியா பயணமானார். பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக லண்டன் சென்ற ஜனாதிபதி நாடு திரு-ம்பியதும் அமைச்சர் அமுனுகம தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும் வகையில் தயாரித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். அந்த அறிக்கை ஸ்ரீ.ல.சு.க. நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கு ஏற்ப அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக நல்லாட்சி கவிழும் என மனப்பால் குடித்த இப்பாராளுமன்ற உறுப்பினர்கள், தம் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதன் விளைவாக ஸ்ரீ.ல.சு.க. நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதோடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு நல்குமாறு கோரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தவறாக நோக்கியதன் விளைவாக பதவிகளை இழந்துள்ள இவர்கள் தாம் விழுந்த குழியில் ஏனையவர்களையும் விழுமாறு கோருவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத விடயமாகும். அது ஒரு நாகரிகமான கோரிக்கையும் அல்ல.
நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட முன்வருபவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது. நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது. இது வளர்முக நாடான இலங்கைக்கு ஆரோக்கியமானதுமல்ல. நாட்டின் மீது உண்மையாக அன்பு கொண்டவர்கள் இதனை ஒரு போதுமே மறுக்க மாட்டார்கள்.
ஆகவே தற்போதைய சூழலில் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட குறித்த 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சகலரும் முன்வர வேண்டும். அதுவே நாட்டின் சுபிட்சத்திற்கும், விமோசத்திற்கும் அடித்தளமாக, ஆதாரமாகவும் அமையும் என்பதில் சந்தேகத்திற்கு இடமிருக்க முடியாது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.