அரசியல் நாடகங்களை அரங்கேற்றி நான் ஜனாதிபதியாகவில்லை – கோட்டாபய
In இலங்கை February 7, 2021 3:54 am GMT 0 Comments 1475 by : Dhackshala
அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ நான் ஜனாதிபதியாகவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெரணியகலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி நேரடியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இது அரசியல் நாடகமாகும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது தேர்தல் காலங்களிலாகும். அதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.
ஏன் ஜனாதிபதி கிராமங்களுக்குச் செல்கின்றார்? அதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள் அல்லவா என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளும் முறைமையும் உள்ளது. ஆனால் நேரடியாக மக்களை சென்று சந்திப்பதே நான் பின்பற்றும் முறைமையாகும்.
கிராமப்புறங்களிலுள்ள அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை தவறான புரிந்துகொள்ளவோ அல்லது திரிபுபடுத்தவோ கூடாது.
மனிதாபிமானத்தை மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். அரசியல் நாடகங்களை அரங்கேற்றி அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து நான் ஜனாதிபதியாகவில்லை. வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மக்கள் மத்தியில் செல்ல முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.