அரசை பாதுகாக்கும் வலிமையிருந்தும் தமிழருக்கு பயன் ஏதுமில்லை
April 8, 2019 3:25 am GMT
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்பார்த்ததைப்போன்று நிறைவேறியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சாணக்கியத்தை மிகச் சரியாக பிரயோகித்துள்ளார். என்னதான் எதிர்க்கட்சியினர் எதிர்த்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எனும் ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதிலையே பிரதமரின் முழுக்கவனமும் இருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும்வரை இப்போதைக்கு அரசாங்கத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படப்போவதில்லை என்பதில் பிரதமர் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை.
சுதந்திரக் கட்சியினரிடையே முரண்பாடுகளும், ஒற்றுமையும் இல்லை என்றபோதும் அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை பிரதமர் அவ்வளவாக நம்பியிருக்கவில்லை. ஆனால் அவர்களில் சிலரோடு இருக்கும் உறவானது பாதகமாக அமையாது என்றபோதும் நேரடியாக உதாவது என்பதே பிரதமரின் கணக்காக அமைந்திருந்தது. இறுதியில் அதுவே நடந்தது.
அரசுக்கு 119 வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 74 வாக்குகளும் கிடைத்தது. ஆகையால் 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் வெற்றிபெற்றது.
இந்த முடிவுக்கு முன்னர்வரை பிரதமர் பல காய்களை நகர்த்தியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள் என்னதான் அரசை எதிர்த்து கருத்துக்களை முன்வைத்தாலும் அதை எதிர்த்து ஆட்சியாளர்களின் தரப்பிலிருந்து எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்தை எதிர்த்தோ, விமர்சித்தோ கருத்துக்களை முன்வைக்கக் கூடாது என்பதை மட்டும் தனது கட்சிக்காரர்களிடம் கடுமையான கட்டளையாக கூறியிருந்தார்.
இந்த அணுகுமுறையானது ‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடவும், சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்ற தந்திரோபாயமாகவே பிரதமர் சிந்தித்தார். ஆகையால்தான் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னதான் கேள்வி கேட்டாலும் அரசாங்கம் எதிற்கும் பதிலளிக்கவில்லை.
அரசாங்கம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அதில் மாற்றங்களைச் செய்யக் கூடாது. சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும். அது சாத்தியப்படாவிட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும், அரசாங்கம் காணிகளை விடுவிக்கவில்லை, அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, பிரதமர் அரசியல் தீர்வை வழங்குவதில் அக்கறையோடும், துணிச்சலோடும் செயற்படவில்லை.
அரசாங்கம் எம்மை ஏமாற்றுகின்றது, அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தை புகட்டுவோம், கூட்டமைப்பு அரசுக்கு எச்சரிக்கை என்றெல்லாம் பல கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தாலும், இவை அனைத்துவே ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ என்ற கதையாகவே போனது.
அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு மிகப்பெரிய உதாரணமாகவே கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெற்ற வடக்கு கிழக்கு விசேட செயலணியின் கூட்டத்தில் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பிரதானிகள் முன்னிலையில் கடுங்கோபத்துடன் சம்மந்தன் தனது கருத்துக்களை முன்வைத்தார் அதாவது, நீங்கள் அரசியல் தீர்வையும் வழங்கவில்லை, அபிவிருத்தியிலும் அசமந்தமாகச் செயற்படுகின்றீர்கள் நீங்கள் இவ்வாறான போக்கில் போனால் நாங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்கத்தயங்க மாட்டோம், தனிவழியில் செல்லவும் தயங்கமாட்டோம் என்றும் மிகக் காட்டமாக கூறியபோது, சம்மந்தனின் கருத்தை காதில் வாங்காதவர்போல் பிரதமர் மெல்லிய புன்முறுவலுடன், இருந்ததையும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனமெடுத்து வருகின்றது என்றும் மேம்போக்காக பதிலளித்திருந்தார் என்றும் தெரியவருகின்றது.
அதாவது இந்த சந்திப்பானது வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு முதல் நாள் நடைபெறுகின்றது. அந்தக் கூட்டத்தில் தனது முக்கியஸ்தர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு சம்மந்தர் இவ்வாறு பேசுவதை பிரதமர் விரும்பவில்லை. என்றாலும் வரவு செலவுத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக மௌனம் காப்பதும், மெல்லிய சிரிப்போடு பிரச்சனைகளைக் கடந்து செல்வதுமே புத்திசாதுரியமானது என்பதே பிரதமரின் நிலைப்பாடாக இருந்தது.
வரவு செலவுத்திட்டத்தை பொது எதிரணியினரும், ஜே.வி.பியினரும் எதிர்ப்பதாக முன்னரே அறிவித்திருந்தபோதும், சுதந்திரக் கட்சியினர் தமது முடிவில் தடுமாற்றங்களுடனேயே இருந்தனர்.அதேவேளை ஜே.வி.பியினர் எதிர்த்தாலும் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மைக்கு குறையாத ஆதரவு நிச்சயம் என்ற நம்பிக்கையோடு பிரதமர் திட்டங்களை வகுத்திருந்தார். இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்கும் தர்மசங்கடத்திற்குள் இருப்பதால் எதிர்பார்த்ததைவிடவும் மேலதிகமாக 2 ஆதரவு மேலதிகமாகவே இருந்தது.
தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியாளர்களின் அச்சாணியாக இருக்கும் தமிழர் பிரதிநிதித்துவமானது மிகப்பலமான நிலையில் இருக்கின்ற தற்போதைய அரிய சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனங்களை நிராகரிக்க முடியாது.
பொது எதிரணியினரைப் பொறுத்தவரை அவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றனர். அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உட்கட்சி அதிருப்தியை தந்திரமாக கையாள்வதற்கும், அவர்களை வென்றெடுப்பதற்கும் தேவையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கவில்லை.
கடந்த ஒக்ரோபர் மாதம் ஆட்சியை மாற்றுவதற்கு முனைப்புக்காட்டி பொது எதிரணியினர் பின்னர் தமக்கான பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொள்வதில் தோல்வி கண்டார்கள். முஸ்லிம் கட்சிகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வென்றெடுத்து பெரும்பான்மையை நிறுபிக்கமுடியும் என்று எதிர்பார்த்தபோதும் அவர்களால் அதைச் சாதிக்கமுடியவில்லை.
வரவு செலவுத் திட்டத்தினையும் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாமல் செய்து ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக கூறினார்கள். ஆனால் பொது எதிரணியினரால் சுதந்திரக் கட்சியினரையே வென்றெடுக்க முடியவில்லை என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. எனவே இந்த நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் நிறைவடையும்வரை இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதே யதார்த்தமாகியுள்ளது.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான பரபரப்புக்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த பரபரப்பான செய்தியாக ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பேச்சுக்களே முன்னிலை வகிக்கப்போகின்றது. ஏன் என்றால் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நிறைவுக்கு வரவேண்டும்.
ஆனால் 19ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியானவர் ஐந்து வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போது பதவி வகிக்கும் ஜனாதிபதி 2015 ஜனவரி 8ஆம் திகதி பதவி ஏற்ற காலத்திலிருந்து காலத்தை கணக்கிட வேண்டுமா? அல்லது 19ஆவது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை கணக்கிட வேண்டுமா? என்பதே கேள்வியாக எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு தீர்வைத்தருமாறு ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
ஜனாதிபதி அவ்வாறு கோரிக்கை விடுத்திருப்பதற்குக் காரணம், பதவியேற்ற காலத்தை கணக்கிடுவதாக இருந்தால் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை செய்து தேர்தலை நடத்தி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்க வேண்டும். 19ஆவது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து ஐந்து வருடங்கள் என்றால் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை தற்போதைய ஜனாதிபதி பதவி வகிக்கலாம்.
அவ்வாறு ஒரு கால அவகாலம் ஜனாதிபதிக்கு கிடைக்குமாக இருந்தால் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அதாவது தற்போதைய நாடாளுமன்றத்தின் நான்கரை வருடங்கள் நிறைவடையும் அந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத்திற்கு தேர்தலை நடத்தலாம் என்ற சட்டத்தை அமுல்படுத்தலாம்.
ஆகவே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிட்டு அதன் சாதக பாதகங்களை பார்த்து அடுத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லமுடியும் என்று தற்போதைய ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே தற்போது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். சட்டவல்லுனர்களோ, தற்போதைய ஜனாதிபதியானவர் தாம் பதவி ஏற்ற காலத்தையே கணக்கிட்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று கூறுகின்றனர்.
-
இலங்கையின் தேசிய நெருக்கடியில் தமிழர்களின் வகிபாகம் என்ன?
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தமிழ் மக்கள் ...
-
இலங்கை சர்வதேச சக்திகளின் போர்க்களமானால் இலங்கையர்களுக்கே பேராபத்தாகும்!
மீண்டும் அவசரகாலச் சட்டம், மீண்டும் இராணுவக் கெடுப...