அளம்பில் துயிலுமில்லத்தில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த துப்பரவுப் பணி!

முல்லைத்தீவு, அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியில் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சென்றிருந்த பொலிஸார், அங்கு துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ரவிகரனை அழைத்து குறித்த பகுதி இராணுவத்திற்கு உரியதெனவும், துயிலுமில்ல வளாகத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் கூறியிருந்தனர்.
எனினும், இதனை ஏற்க மறுத்த ரவிகரன் குறித்த பகுதியில் நீண்டகாலமாக மாவீரர்களுக்கு வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்காகவே துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதாகவும், இராணுவத்தினர் துயிலுமில்லத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லத்திற்கு வெளியே வீதி ஓரத்தில் அஞ்சலி நிகழ்வை செய்வதாகவும் அவர் ரவிகரன் பொலிஸாரிடம் குறிப்பிட்டார். இதனையடுத்து, தொடர்ந்து துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், அப்பகுதிக்கு வருகைதந்த புலனய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துயிலுமில்லத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள தங்கபுரம் சந்திப் பகுதியில் இருந்த இராணுவ வீதித்தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.