அழகிய குடும்பத்தை தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பறிகொடுத்து தவிக்கும் தாயின் சோகம்!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலரும் தங்கள் குடும்பத்தினை இழந்து பரிதவித்து வரும் நிலையில், தனது முழு குடும்பத்தையே இழந்து தவிக்கும் தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் இலங்கை மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது முழு குடும்பத்தையே இழந்து தவிக்கும் தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கதிரான பிரதேசத்தை சேர்ந்த சந்திமான நெரன்ஞனி யசவர்தன என்ற பெண்ணே தனது குடும்பத்தை பறிகொடுத்துள்ள நிலையில், பரிதவித்து வருகின்றார். அவர் தனது மகள் இருவர் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தனது குடும்பத்துடன் நீர்கொழும்பு கட்டான தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அவர் இழந்துள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண், ‘எனது இரண்டு மகள்களும் நானும் ஒரே வரிசையில் அமர்ந்தோம். கணவர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். திடீரென பாரிய சத்தம் ஒன்று கேட்டது.
எனது கண்கள் இரண்டு தெரியாமல் போனது போன்று இருந்தது. இதன் போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான எனது ஒரு மகள் ஒரு காலின் மீது மற்ற மகள் அடுத்த காலின் மீதும் கிடந்தார்கள்.
என்னால் அவர்களை தூக்கவோ காப்பாற்ற முடியவில்லை. என்னால் உணர முடியவில்லை என மகளிடம் கூறினேன். திரும்பி பார்க்கும் போது கணவரும் விழுந்து கிடந்தார்.
வைத்தியசாலைக்கு என்னை கொண்டு சென்றார்கள். வைத்தியசாலை முழுவதும் பைத்தியம் பிடித்தவள் போன்று எனது குடும்பத்தை தேடினேன்.
எனது கடைசி மகள் மாத்திரமே கிடைத்தார். அவரும் உயிரிழந்து விட்டார். மூவரும் உயிருடன் இல்லை என்று இறுதியிலேயே எனக்கு தெரியவந்தது.
ஒரு தாயாக இதனை நான் எப்படி தாங்கிக்கொள்வேன். இந்த ஒளிப்படங்களை நான் எப்படி பார்க்க முடியும்’ என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.