அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்
June 16, 2018 6:32 pm GMT
வாழ்ந்த போதும் மட்டுமல்ல மறைந்த பின்னரும் கூட மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படாத ஒரே அரசியல் தலைவராக பேசப்படுபவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவரது அரசியல் வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை, மருத்துவமனை வாழ்க்கை மட்டுமின்றி, அவரது சாவும் கூட பல்வேறு மர்மங்களை வீசிவிட்டே சென்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரும் அவரது மரணம் பற்றிய மர்மம் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்தியா பூராவும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி நிற்கிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த இன்றைய தமிழகத்தின் ஓ.பி.எஸ்,ஈ.பி.எஸ் அணியால் அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அப்பப்போ கூடி விசாரணைகளை முன்னெடுத்தாலும் உருப்படியாக எதுவும் வெளி வந்ததாக தெரியவில்லை.
அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ராஜ்பவன் வட்டாரம், டாக்டர்கள் என பல தரப்பிடம் விசாரணை நடத்தி வருகிறது இந்த ஆணையம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஆயிரம் பக்கங்கள் கொண்ட சிகிச்சை விபரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
அவற்றில் டாக்டர் சிவக்குமார் என்பவர் சமர்ப்பித்த ஆடியோ பதிவை மட்டும் வெளியிட்டு தமிழகத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது ஆணையம். 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில் மூச்சு திணறலுக்கு மத்தியில் ஜெ., பேசிய பேச்சுக்கள் வெளியாகியது.
இந்திய அளவில் பேசபட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் அரச காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுரத்தை மக்கள் மனங்களில் இருந்து மறக்கடிப்பதற்காகவே ஜெ., பேசிய அந்த ஓடியோவை விசாரணை ஆணையம், அதற்கு விதிக்கப்பட்ட வரம்பு எல்லைகளை மீறி வெளியிட்டது என பல விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. மேலும் ஆணையத்திடம் கையளிக்கபட்ட ஜெயலலிதாவின் உணவுப்பட்டியல் கட்சியினரை கலக்கமடைய வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது .
சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவுகள் அவரின் மரணத்தின் சந்தேகத்தை மேலும் வலுப் படுத்துகிறது. குறிப்பாக டிசம்பர் 2, 3ம் தேதிகளில் அவர் அப்பிள், ஸ்ட்ரோபெரி, வாழைப்பழ மில்க் ஷேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார். நவம்பர் 22ம் தேதி ஒரே நாளில் குலோப் ஜாம், லட்டு, ரசகுல்லா ஆகிய இனிப்புகளை சாப்பிட்டுள்ளார். ஒரு சர்க்கரை நோயாளிக்கு எப்படி கட்டுப்பாட்டை மீறி இனிப்பு அயிட்டங்களை கொடுத்தனர் என்பது டயட்டீசியன்களின் கேள்வியாக உள்ளது.
இந்த இனிப்பு வகைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்ததா…? அல்லது அவர்கள் கட்டுப்பாட்டை மீறி உடனிருப்பவர்களே கொடுத்தனரா…? என்கின்ற கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணையம் விடை தேட முற்படவில்லை.
உணவு கட்டுப்பாடுகள் இல்லாததால் அவரது உடல்நிலை மோசமானது என்பது பின்னாட்களில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. மரணத்தின் பின்னணியை முழுமையாக விசாரித்து உண்மையை வெளியிட வேண்டிய ஆணையம் திடீர் திடீரென வெளியிடும் தகவல்கள் பொதுமக்களை குழப்பும் வகையில் உள்ளது.
அமைச்சர்கள், மருத்துவர்கள், அரச அதிகாரிகள் போன்றோரின் சாட்சியங்கள் ஆணையத்தின் விசாரணையை திசை திருப்பும் வகையிலேயேயே அமைந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது. திமுக உட்பட்ட எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள விசாரணை ஆணையம் பொதுமக்களிடம் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வது அவசியமாகும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் அவற்றை நான் நேரடியாக பார்த்தேன், அவர் குணமடைந்து வருகிறார், இன்று சிறிது நேரம் நடந்தார் என அமைச்சர்கள் தெரவித்த கற்பனைக் கதைகள் போலவே விசாரணை ஆணையமும் தகவல்களை வெளியிடுகிறதோ எனவே எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்து மக்களிற்கு மட்டுமல்ல அதிமுக தொண்டர்கள் தலைவர்கள் என பலரின் வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்த, புரட்சித் தலைவி என அதிமுகவின் அடிமட்டத் தொண்டனில் இருந்து அமைச்சர்கள் வரை போற்றப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள முடிச்சுகள் தொடர்பாக தெளிவாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படவேண்டும் என்பதும்,அதற்கேற்ப ஆணையமும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுமே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடுமா…? எதிர்பார்ப்பு பொய்த்து விடுமா…? இன்றைய தினத்திற்கு விடை தெரியா வினாக்கள்.
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...