ஆஸி. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு! (2ஆம் இணைப்பு)
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குள்ள இரவு விடுதியொன்றிற்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்தனர். அவர்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மேலும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பொதுமகன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரவு விடுதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, அங்கு வந்த காரொன்றிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் காயம் – இருவர் கவலைக்கிடம்!
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரவு விடுதியொன்றிற்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தீவிரவாத தாக்குதல் அல்லவென்றும், மோட்டார் சைக்கிள் கும்பலொன்றுக்கு தொடர்பிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 1996ஆம் ஆண்டு தாஸ்மானியா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச்சட்டம் கடுமையாக்கப்பட்டது. அதன் பின்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் அரிதென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.