அஸ்வின் அபாரம்: ராஜஸ்தான் அணியை சுருட்டியது பஞ்சாப் அணி
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரான 32ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மறுபுறம் நடப்பு தொடரில் ஆறாவது தோல்வியை தழுவிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு நடப்பு தொடரில் பஞ்சாப் அணியிடம் இரண்டாவது முறையாக ராஜஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.
நேற்று மொஹாலியில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக லோகேஷ் ராகுல் 52 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ராகுல் த்ரிபத்தி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அர்ஷ்த்தீப், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, துடுப்பாட்டத்தில் 4 பந்தில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.