ஆட்சியினை தக்கவைக்க அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது – நாமல் சாடல்
In இலங்கை April 2, 2019 10:04 am GMT 0 Comments 2578 by : Dhackshala
ஆட்சியியை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கம், நாட்டில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், கூறிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொய் கூறி ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் தற்போது பொய்ப் பிரசாரங்களையே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ராஜபக்ஷக்களின் பணமும் சொத்தும் டுபாயில் இருப்பதாகக் கூறினார்கள். வொக்ஸ்வெகன் வாகன உற்பத்திச்சாலையை குளியாப்பிட்டியில் நிர்மாணிக்கவுள்ளதாகக் கூறினார்கள். அத்தோடு, 2 பில்லியன் டொலர் பெறுமதியில் உலகின் உயரமான கட்டடம் ஸ்தாபிக்கவுள்ளதாகக் கூறினார்கள்.
இதற்காக டுபாய் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றையும் செய்துகொண்டதாகக் கூறினார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன நடந்தது என நாம் அரசாங்கத் தரப்பினரிடம் கேட்க வேண்டும்.
எமது நாட்டுக்கு முதலீடு அவசியமாகிறது. நாம், எப்போதும் முதலீடுகள் நாட்டுக்குள் வருவதை எதிர்க்கவில்லை. ஆனால், முதலீடுகள் வருவதற்கென ஒரு முறைமை உள்ளது.
இவை எதுவும் இல்லாது நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராகவே நாம் எதிர்ப்பினை வெளியிடுகிறோம்.
இந்த நான்கு வருடங்களில், பொய் பிரசாரங்கள், கருத்துக்களைக்கூறி மக்களை திசைத்திருப்பி, ஏமாற்றியது மட்டுமே மிச்சமாகும். இதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.