ஆப்கானில் தொடர்ச்சியாக 10 ரொக்கெட் தாக்குதல்கள்: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களால், ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதல்களை, காபூல் பொலிஸார் உறுதிப்படுத்தினர். தலைநகரின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான ரொக்கெட்டுகள் தாக்கியதாகக் பொலிஸார் கூறினர்.
மூன்று ரொக்கெட்டுகள் காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும், ஏழு குடியிருப்பு பகுதிகளிலும் தரையிறங்கியதாக உட்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
தலைநகரின் வடக்கு விளிம்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஏவப்பட்ட ரொக்கெட்டுகள், காபூல் விமான நிலையத்தின் வளாகத்தில் விழுந்ததாகவும் இதன்போது காம் எயார் விமானத்தை சற்று சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம் எயார், 2003இல் தொடங்கி உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்குகிறது. இது ஆப்கானிஸ்தானின் முதல் தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனமாகும்.
காபுலில் ஒரே மாதத்தில் இரண்டாது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
கட்டார் நாட்டில் செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தலிபான்களும் அரசாங்கமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், காபூலில் பல பயங்கர தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.