ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 2,500ஆகக் குறைப்பு!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 2,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, பென்டகன் தெரிவித்துள்ளது.
இது 2001ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் படைகளின் மிகக் குறைந்த மட்டமாகும் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை ஜனவரி நடுப்பகுதியில் 4,500 முதல் 2,500 ஆகக் குறைக்கும் என்று கூறியது. இதனடிப்படையில் இந்த குறைப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நட்பு நாடுகளின் கடுமையான எதிர்ப்பின் பின்னர் அமெரிக்காவின் மிக நீண்ட போரிலிருந்து முழுமையாக விலகுவதாக அமெரிக்கா கூறுகிறது.
‘2021ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அமெரிக்க துருப்புக்களின் அளவை பூஜ்ஜியமாகக் குறைக்க முற்படுகின்றோம். இதுபோன்ற எதிர்கால குறைபாடுகள் நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கும்’ என பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பென்டகன் செய்தித் தொடர்பாளர், இராணுவ மேஜர் ராப் லோட்விக் கூறுகையில், ‘நாடு முழுவதும் போர் மண்டலம் முழுவதும் துருப்புக்களின் அளவைக் குறைத்தல், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய படை பாதுகாப்புத் தேவைகளை சரிசெய்தல் ஆகியவை படை மற்றும் முக்கிய பணி இலக்குகளுக்கு ஆபத்து அதிகரிக்காமல் ஒரே இரவில் இடைநிறுத்தப்படக்கூடிய ஒன்றல்ல’ என கூறினார்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. அதன் பிறகு ஆப்கானுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன.
இதன்பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் நீண்ட கால மோதல்களினால் ஏற்பட்ட சேதங்களை கருத்திற் கொண்டு, இரு தரப்புகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆப்கன் அரசாங்கம் – தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.