ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் கட்டளை!- சங்க தலைவியையும் முன்னிலையாகுமாறு பணிப்பு
In இலங்கை December 18, 2020 3:03 am GMT 0 Comments 1745 by : Yuganthini
வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன், அந்த சங்கத்தின் தலைவியையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவிக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைப்பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வவுனியா தலமை பொலிஸ் பரிசோதகரினால் இந்த மன்றிற்கு ARI623/2020கீழ் தாக்கல் செய்த அறிக்கையின்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு, வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் நடாத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் 1400 நாட்களை கடந்துள்ளமையால், இதுவரையும் இந்த குடும்பத்தினருக்கு தீர்வு கிடைக்காதமை சம்பந்தமாக, அன்றையதினம் விளம்பர பலகைகளை காட்சிக்கு வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டம் காரணமாக தற்போது பரவிவரும் கொரோனா நோய் மேலும் பரவுவதற்கும் மற்றும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் இடமுள்ளமையினாலும், தனிமைப்படுத்தல் விதிமுறை இல்லாமல் போகும் என்பதனாலும், இந்த ஆர்பாட்டத்தை நடாத்த இருக்கும் ஆர்பாட்டகுழுவின் தலைவியாகிய தேக்கவத்தை வவுனியா என்னும் விலாசத்தில் வசிக்கும் காசிப்பிள்ளை ஜெயவனிதா என்பவருக்கு குற்றவியல் நடவடிக்கை முறை சட்டகோவையின், சட்டம் 106(1) பிரிவின் கீழ், இந்த ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு இத்தால் கட்டளையிடுகின்றேன்.
இது சம்பந்தமாக அறிந்துகொள்வதற்காக தேக்கவத்தை வவுனியா என்னும் விலாசத்தில் வசிக்கும் காசிப்பிள்ளை ஜெயவனிதா ஆகிய உங்களை 2021.01.04 திகதி அன்று காலை 09.30 மணிக்கு இந்த மன்றிற்கு முன்னிலைப்படுமாறு இத்தால் ஊடாக கட்டளையிடுகின்றேன்’ என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.