இங்கிலாந்து- ஸ்கொட்லாந்து வரும் பயணிகளுக்கு கொவிட்-19 சோதனை முடிவுகள் அவசியம்!
In இங்கிலாந்து January 8, 2021 7:37 am GMT 0 Comments 1923 by : Anojkiyan

சர்வதேச பயணிகள், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு செல்வதற்கு முன்பு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவை வழங்க வேண்டும்.
பிரித்தானியர்கள் உட்பட அவர்கள் இருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரம் வரை ஒரு சோதனை எடுக்க வேண்டும்.
புதிய நடவடிக்கைகள் அடுத்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்கொட்லாந்தில் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும்.
இதன்மூலம் புதிய மாற்றம் நிறைந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமென நம்பப்படுவதாக போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் நுழையும் தொற்றுகளை தடுக்க ஏற்கனவே எங்களிடம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் உள்ளன.
ஆனால், சர்வதேச அளவில் வைரஸின் புதிய மாற்றம் நிறைந்த வைரஸ்கள் உருவாகி வருவதால் நாம் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என கூறினார்.
வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான இதேபோன்ற நடவடிக்கைகள் குறித்து அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட நிர்வாகங்களுடன் அதிகாரிகள் நெருக்கமாக பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் ஒரு நேர்மறையான சோதனையின் 28 நாட்களுக்குள் மேலும் 1,162 இறப்புகள் பதிவாகிய பின்னர் இது வந்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது நாள் 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 52,618 புதிய தொற்றுகள் உள்ளன.
தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஜனவரி 15ஆம் திகதிக்குள் இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு நூறாயிரக்கணக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதனிடையே பிரதமர் வியாழக்கிழமை 1.5 மில்லியன் மக்கள் இப்போது கொவிட் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.